SEBI தனது விதிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. முதன்முறையாக NCD-களைப் பொதுச் சந்தையில் வெளியிட விரும்பும் நிறுவனங்கள், தங்கள் பழைய அன்லிஸ்டட் (Unlisted) கடன்களைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. இது நிறுவனங்களுக்குப் பெரும் செலவைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI, நிறுவனங்கள் பொதுச் சந்தையில் Non-Convertible Debentures (NCD)-களை வெளியிடுவதை எளிதாக்கும் வகையில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. எளிமையாகச் சொன்னால், NCD என்பது நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து வாங்கும் கடன், இதற்குப் பிரதிபலனாக ஒரு குறிப்பிட்ட வட்டி வழங்கப்படுகிறது.
பழைய சுமைக்கு முற்றுப்புள்ளி
இதுவரை இருந்த விதிகளின்படி, ஒரு நிறுவனம் புதிய NCD-களைப் பட்டியலிட விரும்பினால், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் அனைத்து அன்லிஸ்டட் கடன் பத்திரங்களையும் பட்டியலிட வேண்டிய கட்டாயம் இருந்தது. இது நிர்வாக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பெரிய சுமையாக இருந்தது. இதனால் பல நிறுவனங்கள் பொதுச் சந்தைக்கு வருவதைத் தவிர்த்து வந்தன.
தற்போது, 'Grandfathering' என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ள SEBI, நிறுவனங்கள் தங்களின் பழைய கடன் பத்திரங்களை அப்படியே வைத்திருக்க அனுமதி அளித்துள்ளது. இந்த மாற்றம், கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுச் சந்தையில் கடன் திரட்டுவதை எளிதாக்கியுள்ளது.
சந்தைக்கு இது ஏன் முக்கியம்?
இந்தியப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, வங்கி கடன்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை மாற வேண்டும் என்பது நீண்ட கால நோக்கம். கார்ப்பரேட் பாண்ட் சந்தை விரிவடையும் போது, முதலீட்டாளர்களுக்குப் புதிய Fixed-income வாய்ப்புகள் கிடைக்கும். சந்தையில் பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்கள் அதிக வெளிப்படைத்தன்மையையும், சிறந்த விலை நிர்ணயத்தையும் (Price Discovery) வழங்கும் என்பதால், இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
முதலீட்டாளர் பாதுகாப்பு
பழைய கடன்களுக்குச் சலுகை வழங்கினாலும், புதிய வெளியீடுகளில் SEBI எந்த சமரசமும் செய்யவில்லை. புதிய NCD வெளியீடுகள் அனைத்தும் தற்போதைய வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் தகவல்களை வெளிப்படுத்துவதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாற்றத்தால் வரும் காலங்களில் எத்தனை நிறுவனங்கள் பொதுச் சந்தையில் களமிறங்கப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
