மோசடி அம்பலம்: எப்படி நடந்தது?
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI, ஹேமந்த், ரோஹன், அனி்கெட் குப்தா உள்ளிட்ட 7 பேர் மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் கடந்த டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2026 வரை ஒருங்கிணைந்த சந்தை கையாளுதல் திட்டத்தை செயல்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள், 'பங்க்-அண்ட்-டம்ப்' (Pump-and-Dump) எனும் உத்தியின் டிஜிட்டல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளனர். மிகவும் குறைவாக வர்த்தகமாகும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன (SME) பங்குகளின் அதிக அளவிலான பங்குகளை முதலில் வாங்கியுள்ளனர். பின்னர், எக்ஸ் (X), டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில், 'பல மடங்கு லாபம்' ('multibaggers') தருவதாக கூறி, கவர்ச்சிகரமான பரிந்துரைகளை பரப்பியுள்ளனர். இதன் மூலம் சில்லறை முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் ஆர்வம்காட்டி வாங்கியதும், பங்குகள் விலை உயர்ந்த பிறகு, இந்த கும்பல் தங்களது பங்குகளை விற்று லாபம் பார்த்துள்ளனர். SEBIயின் ஆய்வின்படி, இந்த காலகட்டத்தில் இவர்களின் வர்த்தக மதிப்பு 86% அதிகரித்துள்ளது. இவர்களின் லாபம் 242% உயர்ந்து, மொத்தம் ₹58.40 கோடி ஈட்டியுள்ளனர். இதில், ₹20.25 கோடி சட்டவிரோத லாபம் என கண்டறியப்பட்டுள்ளது.
