செமி கண்டக்டர் மற்றும் AI உற்பத்தியை வேகப்படுத்த, அதிநவீன தயாரிப்பு இயந்திரங்களுக்கு கட்டாய BIS சான்றிதழ் விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இறக்குமதி தாமதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், உயர்தொழில்நுட்ப உற்பத்தி இயந்திரங்களுக்கு BIS சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் புதிய வரைவுத் திட்டத்தை உருவாக்கி வருகிறது. டோக்கியோ பயணத்தின் போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். செமி கண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளுக்குத் தேவையான இயந்திரங்களை விரைவாக இறக்குமதி செய்ய இது வழிவகுக்கும்.
ஒழுங்குமுறை மாற்றங்கள் ஏன்?
பெரிய அளவிலான உற்பத்தி ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளிலிருந்து உயர்தர இயந்திரங்களை இறக்குமதி செய்வது நீண்ட கால சவாலாக இருந்து வருகிறது. கட்டாய சான்றிதழ் சோதனைகள் மற்றும் நடைமுறைகள் காரணமாக, திட்டங்கள் தொடங்கப்படுவதில் பல மாதங்கள் தாமதம் ஏற்படுகிறது. சர்வதேச தரத்தில் ஏற்கனவே சான்றளிக்கப்பட்ட இயந்திரங்களுக்கு மீண்டும் இந்தியாவில் சோதனைகள் தேவையில்லை என்பதை உறுதி செய்வதன் மூலம், இந்தத் தடைகளை நீக்க அரசு முனைப்பு காட்டுகிறது.
இந்தியாவின் மெகா இலக்கு
இந்த கொள்கை மாற்றம், இந்தியாவை உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும். 2032-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் செமி கண்டக்டர் தேவை $150 பில்லியன் டாலரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், தெளிவான ஒழுங்குமுறை சூழலை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. BIS தளர்வு தவிர, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) தொடர்பான விதிகளையும் அரசு மறுஆய்வு செய்து வருகிறது.
தற்போது இந்த விதிமுறைகள் வரைவு நிலையில் உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு, எந்தெந்த இயந்திரங்களுக்கு இந்த விலக்கு பொருந்தும் என்பது தெளிவாகத் தெரியவரும். புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான 'Time-to-market' கால அவகாசத்தை இந்த மாற்றம் எவ்வளவு குறைக்கிறது என்பதுதான் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.
