வரும் நிதி ஆண்டிற்குள் இந்தியாவின் முதல் நேஷனல் மினரல் எக்ஸ்சேஞ்சை (National Mineral Exchange) கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கனிமங்களின் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து, சுரங்க நிறுவனங்களுக்கு ரிஸ்க் மேனேஜ்மெண்ட் செய்ய வழிவகை பிறக்கும்.
இந்தியாவில் கனிம வளங்கள் வர்த்தகம் இனி நவீனமயமாகப்போகிறது. மத்திய சுரங்க அமைச்சகம் மற்றும் SEBI இணைந்து, கனிமங்களுக்கென பிரத்யேகமான எக்ஸ்சேஞ்சை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. தற்போதுள்ள சிக்கலான ஒப்பந்தங்கள் மற்றும் இ-ஏல முறைகளை மாற்றி, ஒரு வெளிப்படையான வர்த்தகத் தளத்தைக் கொண்டு வருவதே இதன் நோக்கம். உலகச் சந்தையில் கனிம விலையை நிர்ணயிக்கும் நாடாக இந்தியாவை மாற்றுவதே இந்த நீண்ட காலத் திட்டம்.
பொருளாதார தாக்கம்
தற்போது கனிம சந்தையில் விலை நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்திய சுரங்கப் பணியகம் (Indian Bureau of Mines) வழங்கும் தரவுகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. கடந்த 2025-26 நிதி ஆண்டில் இந்தியாவின் கனிம இறக்குமதி மட்டும் ₹10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது, இது நாட்டின் மொத்த ஜிடிபியில் (GDP) சுமார் 3% ஆகும்.
நிறுவனங்களுக்கு என்ன பயன்?
இந்த புதிய எக்ஸ்சேஞ்ச் மூலம் சுரங்க நிறுவனங்கள் தங்கள் வருவாயை உறுதிப்படுத்த முடியும். குறிப்பாக, விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்க 'டெரிவேட்டிவ்ஸ்' (Derivatives) மற்றும் 'ஹெட்ஜிங்' (Hedging) வசதிகள் கிடைக்கும். இது நிறுவனங்களின் லாப வரம்பை (Margins) சீராக வைத்திருக்க உதவும்.
சவால்களும் வாய்ப்புகளும்
இந்தத் திட்டம் வெற்றியடைய வெறும் டிஜிட்டல் தளம் மட்டும் போதாது. நாடு தழுவிய அளவில் தரக்கட்டுப்பாட்டு மையங்கள் (Warehousing and Assaying standards) மிக அவசியம். லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (London Metal Exchange) போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒரு பெஞ்ச்மார்க்கை உருவாக்குவதே அரசின் இலக்கு. அரசு நிறுவனங்களை இந்தத் தளத்தில் பட்டியலிட வைப்பதன் மூலம் போதுமான பணப்புழக்கத்தை (Liquidity) உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
