இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி! காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள் மற்றும் ஏஜெண்டுகளின் கமிஷன் கட்டமைப்புக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர IRDAI திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பிரீமியம் தொகை குறைய வாய்ப்புள்ளது.
இந்திய காப்பீட்டுத் துறையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர IRDAI தயாராகி வருகிறது. காப்பீட்டு நிறுவனங்கள் இனி தங்கள் நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற புதிய விதியை அமல்படுத்த உள்ளதால், பாலிசிதாரர்களுக்கான பிரீமியம் தொகை இனி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
தற்போது பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகள் 22% முதல் 32% வரை உள்ளது. ஆனால், LIC மற்றும் SBI Life Insurance போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவிலான செலவில், அதாவது 11% முதல் 12% வரை மட்டுமே இயங்கி வருகின்றன. இனி அனைத்து நிறுவனங்களும் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
கமிஷன் மீது கை வைக்கும் IRDAI
இந்த சீர்திருத்தத்தின் மிக முக்கியமான அம்சம் கமிஷன் மீதான கண்காணிப்பு ஆகும். தற்போது சில பாலிசிகளில் முதல் ஆண்டு பிரீமியத்தில் 40% முதல் 50% வரை ஏஜெண்டுகளுக்கு கமிஷனாக வழங்கப்படுகிறது. இதனால் தவறான விற்பனை (Mis-selling) நடப்பதாக IRDAI கவலை தெரிவித்துள்ளது. இந்த கமிஷன் தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்குச் சரியான பயன் கிடைப்பதை உறுதி செய்ய இந்த அமைப்பு முயல்கிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த புதிய மாற்றங்களால் சிறிய மற்றும் புதிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கடும் அழுத்தத்தைச் சந்திக்கலாம். அவற்றின் லாப வரம்பு (Profit Margin) குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், நவம்பர் மாதம் அறிமுகமாக உள்ள 'Bima Sugam' டிஜிட்டல் தளம், காப்பீடு வாங்கும் முறையை வெளிப்படையானதாக மாற்றும். 2026-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த புதிய விதிகள் முழுமையாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
