முடங்கிப்போன ரியல் எஸ்டேட் திட்டங்களை மீட்டெடுக்க IBBI ஒரு முக்கிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இனி நிறுவனத்தை மொத்தமாக முடக்குவதற்கு பதிலாக, ஒவ்வொரு புராஜெக்ட்டையும் தனித்தனியாகப் பிரித்து முடிக்க இந்த புதிய வழிமுறை உதவும். இதன் மூலம் 553 வழக்குகளில் சிக்கியுள்ள 2.5 லட்சம் வீட்டு வாங்குபவர்களுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் திவாலான நிறுவனங்களை கையாளும் முறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வர IBBI முயன்று வருகிறது. ஜூலை 2026-ல் வெளியிடப்பட்ட விவாத அறிக்கையின்படி, ஒரு டெவலப்பரின் அனைத்து திட்டங்களையும் ஒரே மூட்டையாகப் பார்க்காமல், ஒவ்வொரு புராஜெக்ட்டையும் தனித்தனியாகப் பிரித்து, வீடுகளை கட்டி முடிப்பதற்கே முன்னுரிமை அளிக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது.
ஏன் இந்த மாற்றம்?
தற்போதைய நடைமுறையில், ஒரு நிறுவனம் திவாலாகும் போது அதன் அனைத்து திட்டங்களும் சேர்த்து ஒரே சட்ட நடவடிக்கைக்குள் இழுக்கப்படுகின்றன. இதனால், கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ள வீடுகளும் மற்ற தோல்வியடைந்த திட்டங்களுடன் சேர்ந்து முடங்கிவிடுகின்றன. இந்த புதிய விதிகளின் மூலம், நல்ல நிலையில் உள்ள திட்டங்களை தனியாகப் பிரித்து, அந்த குடியிருப்பாளர்களை நிறுவனத்தின் நிதி நெருக்கடியிலிருந்து பாதுகாக்க முடியும்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி மேலாண்மை
இந்தத் திட்டத்தை செயல்படுத்த IBBI இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது:
- வெளிப்படைத்தன்மை: இனி Resolution Professionals (RPs) சுயாதீன ஏஜென்சிகள் மூலம் கட்டுமானப் பணிகளின் நிலையைத் தணிக்கை செய்ய வேண்டும். இதன் மூலம் புதிய முதலீட்டாளர்களுக்கு உண்மையான தரவுகள் கிடைக்கும்.
- RERA கணக்குகள்: இதுவரை திவால் நடவடிக்கை தொடங்கியவுடன் ப்ராஜெக்ட் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். ஆனால் இனி, கட்டுமானப் பணிகள் நிற்காமல் இருக்க, இந்த கணக்குகளை கடுமையான கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவால்கள் என்ன?
இதுவரை சுமார் 1.4 லட்சம் வீட்டு வாங்குபவர்களுக்கு இந்த திவால் சட்டத்தின் மூலம் பலன் கிடைத்துள்ளது. இருப்பினும், இன்னும் 2.5 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். இந்த புதிய விதிமுறை வந்தாலும், நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடன் கொடுப்பவர்கள் (Financial Lenders) - வாங்குபவர்கள் இடையிலான முரண்பாடுகள் தீர இன்னும் காலம் பிடிக்கும். NCLT அனுமதிக்கும் திட்டங்கள் களத்தில் எந்த அளவுக்கு விரைவாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பதுதான் இதில் உள்ள பெரிய சவால்.
