இந்திய பங்குச் சந்தையில் செயல்படும் புரோக்கிங் நிறுவனங்கள், தங்களின் குடும்ப ஆதிக்க நிர்வாக முறையை மாற்றிவிட்டு, தொழில்முறை நிர்வாக முறையை (Professional Corporate Structure) கொண்டு வர வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
நிர்வாக சீர்திருத்தம் ஏன்?
இந்திய பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs), பங்குச் சந்தை புரோக்கிங் நிறுவனங்களின் செயல்பாட்டில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. பல தலைமுறைகளாக குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிறுவனங்கள், நவீன காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு.
கசப்பான அனுபவங்கள்!
கடந்த காலங்களில் Karvy Stock Broking மற்றும் Anugrah Stock Broking போன்ற நிறுவனங்களில் நடந்த முறைகேடுகள் முதலீட்டாளர்களைப் பெரும் பாதிப்பிற்குள்ளாக்கின. வாடிக்கையாளர்களின் பணத்தை நிறுவனத்தின் தேவைக்காகப் பயன்படுத்தியதுதான் இந்தத் தோல்விகளுக்கு முக்கிய காரணம். இதைப் போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதற்காகவே, 'உரிமையாளர்' மற்றும் 'நிர்வாகம்' ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என அரசு அழுத்தம் கொடுக்கிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!
அரசு கொண்டுவரத் துடிக்கும் இந்த மாற்றங்கள், சந்தையில் பெரிய நிறுவனங்களுக்கும், சிறிய நிறுவனங்களுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்கும். தொழில்நுட்ப ரீதியாக வலுவாக இல்லாத, வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகம் இல்லாத சிறு புரோக்கிங் நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறவோ அல்லது பெரிய நிறுவனங்களுடன் இணையவோ (Consolidation) வாய்ப்புள்ளது.
எனவே, இனி உங்கள் டிமேட் அக்கவுண்ட் வைத்துள்ள புரோக்கரைத் தேர்வு செய்யும் போது, வெறும் கமிஷன் கட்டணத்தை மட்டும் பார்க்காமல், அந்த நிறுவனம் எவ்வளவு வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டுள்ளது, தணிக்கை முறைகள் எப்படி உள்ளன என்பதை உறுதிப்படுத்துவது உங்கள் பணத்திற்குப் பாதுகாப்பு.
