இனிமேல், வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், முதலீடுகள், டிவிடெண்ட் போன்ற விவரங்கள் அனைத்தும் வருமான வரித்துறையின் Annual Information Statement (AIS)-ல் சேர்க்கப்படும். வெளிநாட்டு வருமானங்களை உங்கள் வரி தாக்கலுடன் (Tax Filing) ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டியது அவசியம்.
வெளிநாட்டு வருமானம் இனி AIS-ல்!
இந்தியாவில் வருமான வரி செலுத்தும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு. மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தற்போது ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இனிமேல் வெளிநாடுகளில் உள்ள உங்களின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள், முதலீடுகள் மற்றும் டிவிடெண்ட் வருமானங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறையின் ஆண்டு தகவல் அறிக்கையான (Annual Information Statement - AIS) -ல் நேரடியாக இடம்பெறும்.
இந்த தகவல்கள், வெளிநாட்டு வருவாய் பரிமாற்ற (Automatic Exchange of Information - AEOI) கட்டமைப்பின் மூலம் பெறப்படுகின்றன. இதன் நோக்கம், வரி செலுத்துவோரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிச் செயல்பாடுகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, வரி அறிக்கைகளை (ITR) துல்லியமாக தாக்கல் செய்ய உதவுவதாகும்.
வரி தாக்கல் செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த புதிய மாற்றத்தால், வெளிநாட்டு முதலீடுகள் அல்லது சொத்துக்களை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வருமான வரி அறிக்கையில் (ITR) குறிப்பிட்டுள்ள வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து விவரங்கள், AIS-ல் காட்டப்படும் தகவல்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். சின்னச் சின்ன வேறுபாடுகள் கூட வருமான வரித்துறையின் விசாரணைக்கு வழிவகுக்கலாம்.
வெளிநாட்டு வரி வரவுகளை (Foreign Tax Credits) க்ளைம் செய்வதில் ஏற்படும் தவறுகள், தவறான நாணய மாற்று விகிதங்களைப் பயன்படுத்துதல், அல்லது ஃபார்ம் 67-ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறுவது போன்ற பொதுவான சிக்கல்கள் இந்த புதிய முறை மூலம் எளிதில் கண்டறியப்படும். எனவே, வெளிநாட்டு வருமானம், டிவிடெண்ட் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்த துல்லியமான பதிவுகளைப் பராமரிப்பதுடன், வரி தொடர்பான அனைத்து ஃபார்ம்களையும் காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்வது மிக அவசியம்.
