இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும் பெரிய அளவிலான கார்ப்பரேட் கையகப்படுத்துதல்களில், சுமார் 3ல் ஒரு பங்கு நிறுவனங்கள் இலக்கை அடையத் தவறியுள்ளதாக Crisil அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள் கடந்த 2017 நிதி ஆண்டு முதல் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த பல நிறுவனங்களை வாங்கி வருகின்றன (M&A). ஆனால், ரேட்டிங் ஏஜென்சியான Crisil நடத்திய சமீபத்திய ஆய்வில், ₹500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 600 பெரிய டீல்களை ஆய்வு செய்ததில், 33% டீல்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஏன் இந்த தோல்வி?
கம்பெனிகள் வளர்ச்சிக்காக புதிய நிறுவனங்களை வாங்கும் போது, முதலீட்டாளர்கள் அதை வரவேற்கிறார்கள். ஆனால், செயல்பாட்டு ரீதியாக (Operational level) இரு நிறுவனங்களையும் இணைப்பதில் உள்ள சிக்கல்கள், கலாச்சார முரண்பாடுகள் மற்றும் ரெகுலேட்டரி தாமதங்கள் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
துறை வாரியான மாற்றம்
- பார்மா மற்றும் டெக் நிறுவனங்கள்: இவை அறிவுசார் சொத்துக்கள் (Intellectual Property) மற்றும் திறமையான பணியாளர்களுக்காக நிறுவனங்களை வாங்குகின்றன. இவற்றை இணைப்பது கடினமானது.
- சிமெண்ட் மற்றும் உலோகம்: இவை புதிய ஆலைகளை கட்டுவதற்கு ஆகும் காலத்தை குறைக்க, ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வாங்கும் 'ஷார்ட்கட்' முறையை பயன்படுத்துகின்றன.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன?
நிறுவனங்கள் புதிய டீல்களை அறிவிக்கும்போது, வெறும் வளர்ச்சிக் கதைகளை மட்டும் பார்க்காதீர்கள். நிர்வாகத்தின் முந்தைய சாதனை (Past Track Record), டீல் மூலம் உருவாகும் கடன் சுமை (Debt Management) மற்றும் ஒருங்கிணைப்பு திறன் ஆகியவற்றை ஆராய்ந்து முதலீடு செய்வது அவசியம். ஒரு டீலின் உண்மையான வெற்றியை 18 முதல் 24 மாதங்களுக்குள் அந்த நிறுவனம் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும்.
