டெல்லியில் மாதம் 400 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, 3 kW திறன் கொண்ட சோலார் பேனல்களை இலவசமாக நிறுவ டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி அரசு தனது சூரிய ஆற்றல் (Solar Energy) கொள்கையில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மின்சாரக் கட்டணத்தை பெருமளவு குறைக்க திட்டமிட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், மாதம் 400 யூனிட் மின்சாரத்திற்கும் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 3 kW திறன் கொண்ட சோலார் ரூப்டாப் பேனல்கள் முற்றிலும் இலவசமாகப் பொருத்தப்படும். மார்ச் 2027-க்குள் சுமார் 2.30 லட்சம் வீடுகளுக்கு இந்த வசதியை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
எப்படிச் செயல்படுகிறது இந்த மானியம்?
முன்பு நடைமுறையில் இருந்த மெதுவான மானிய முறையை மாற்றி, அரசு தற்போது 'Upfront Subsidy' முறையைக் கொண்டு வந்துள்ளது. டெல்லி அரசு ₹78,000 முதலீட்டு மானியத்தையும், அதற்கு இணையான தொகையை மத்திய அரசும் வழங்குகிறது. இந்த ஒருங்கிணைந்த நிதி மூலம், சோலார் பேனல் நிறுவுவதற்கான மொத்த செலவும் ஈடுகட்டப்படுகிறது. பேனல்களை நிறுவுவது மட்டுமின்றி, அவற்றின் பராமரிப்புச் செலவுகளையும் அரசே ஏற்க முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்களுக்கு என்ன செய்தி?
இந்தத் திட்டம் சோலார் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், இன்ஜினியரிங், ப்ரோக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் (EPC) நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர்கள் மற்றும் மவுண்டிங் சிஸ்டம் தேவை இனி வரும் காலங்களில் மிக வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இவ்வளவு பெரிய இலக்கை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடையத் தேவையான விநியோகச் சங்கிலி மற்றும் தொழிலாளர் பலத்தை நிறுவனங்கள் எவ்வாறு கையாளப் போகின்றன என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
