அமெரிக்காவைச் சேர்ந்த Caelux Corporation, இந்திய நிறுவனங்களான GREW Solar, Rayzon Solar மற்றும் Navitas Solar உடன் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 5 GW திறனில் Perovskite-கோட்டட் சோலார் கிளாஸ் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2028-க்குள் சோலார் எனர்ஜி எஃபிஷியன்சியை 29% வரை உயர்த்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்ப மாற்றத்தின் முக்கியத்துவம்
இந்த கூட்டணியின் மையப்புள்ளி Caelux நிறுவனத்தின் பிரத்யேக Perovskite தின்-ஃபிலிம் தொழில்நுட்பம் ஆகும். வழக்கமான சோலார் பேனல் தயாரிப்பு முறைகளை மொத்தமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல், சோலார் கிளாஸ் மீது இந்த மெல்லிய லேயரை பூசுவதன் மூலம் அதிக ஆற்றலை பெற முடியும். உதாரணமாக, தற்போது 10 GW திறன் கொண்ட ஒரு தொழிற்சாலை, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 12 GW வரை உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
29% செயல்திறனை நோக்கி...
தற்போது சந்தையில் உள்ள சோலார் பேனல்கள் சராசரியாக 23% செயல்திறனை (Efficiency) மட்டுமே வழங்குகின்றன. இந்த புதிய தொழில்நுட்பம் அதனை 29% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய தயாரிப்புகளை சர்வதேச சந்தையில் அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும். இந்திய நிறுவனங்களான GREW, Rayzon மற்றும் Navitas ஆகியவற்றுடன் இணைந்து மொத்தம் 5 GW திறனுக்கான உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளனர்.
சவால்கள் மற்றும் எதிர்காலம்
தொழில்நுட்ப ரீதியாக பெரிய வளர்ச்சி இருந்தாலும், பெரிய பரப்பளவில் சீரான கோட்டிங் (Coating) செய்வது மற்றும் நீண்ட காலத்திற்கு வெயில், மழையில் பேனல்கள் பழுதடையாமல் இருப்பதை உறுதி செய்வது ஒரு சவாலான காரியம். Caelux நிறுவனம் 2025-ல் தனது முதல் வணிக ரீதியான ஷிப்மென்ட்களை வெற்றிகரமாக அனுப்பியிருப்பதை ஒரு சான்றாகக் குறிப்பிடுகிறது.
உலக அளவில் ஹைபிரிட்-டாண்டம் (Hybrid-tandem) தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து வரும் வேளையில், இந்திய நிறுவனங்கள் 2028-க்குள் இதற்கான முழுமையான வணிக உற்பத்தியைத் தொடங்கத் தயாராகி வருகின்றன. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், இந்தியாவின் சோலார் உற்பத்தி திறன் மிகப்பெரிய மைல்கல்லை எட்டும்.
