தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான (TNRERA), புதிய நில திட்டங்களுக்கு சாலை, வடிகால் வசதிகளை முடித்த பிறகுதான் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது. இந்த புதிய விதியால் கட்டுமான நிறுவனங்களின் நிதி மேலாண்மை மற்றும் ப்ராஜெக்ட் காலக்கெடுவில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.
ரியல் எஸ்டேட் துறையில் வாடிக்கையாளர் புகார்களை குறைக்க தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) புதிய கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இனிமேல், ஒரு நிலத் திட்டத்தை (Layout) பதிவு செய்ய வேண்டுமானால், அந்த இடத்தில் சாலை வசதி, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் மற்றும் பொது இட ஒதுக்கீடு போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்த பிறகு, ஒப்புதல் அளிப்பதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட 5,119 விண்ணப்பங்களில், வெறும் 3,056 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. அதாவது, வெறும் 60% லே-அவுட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கான பதிவில் 74% அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், நிலத் திட்டங்களுக்கு மட்டும் இந்த கெடுபிடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?
இதுவரை டெவலப்பர்கள் ஆரம்பக்கட்ட முதலீட்டில் லே-அவுட்களை பதிவு செய்துவிட்டு, விற்பனை மூலம் வரும் பணத்தை வைத்துதான் அடிப்படை வசதிகளை செய்வார்கள். ஆனால் இப்போது, முதலிலேயே கட்டுமான நிறுவனங்கள் சொந்த நிதியை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிய கட்டுமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திக்கலாம், இது பெரிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
DRA Homes நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரஞ்சித் ரத்தோடு இது குறித்து கூறும்போது, இது துறையின் வளர்ச்சிக்கு நல்ல மாற்றம் என்றாலும், இதனால் திட்டங்கள் முடிவடைவதற்கான காலம் (Project cycle) நீண்டுகொண்டே போகும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார். நிர்வாகக் காரணங்களால் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அது நிறுவனங்களின் பணப்புழக்கத்தை (Working capital) பாதிக்கும். எனவே, இனி வரும் காலங்களில் சிறிய நிறுவனங்களை விட, நிதி பலம் கொண்ட பெரிய நிறுவனங்களின் கை ஓங்க வாய்ப்புள்ளது.
