பண்டிகைக் காலங்களில் வீடு வாங்கும் போது வழங்கப்படும் அதிரடி தள்ளுபடிகள் பல நேரங்களில் மறைமுகக் கட்டணங்களை உள்ளடக்கியதாக இருக்கும். எனவே, RERA ஒப்புதல், சட்ட ஆவணங்கள் மற்றும் ஒட்டுமொத்த செலவுகளைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம்.
பண்டிகைக் காலங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிடுகின்றன. இலவச இன்டீரியர், ஸ்டாம்ப் டியூட்டி ரத்து போன்ற சலுகைகள் முதலீட்டாளர்களை ஈர்த்தாலும், இவை பல நேரங்களில் சொத்தின் உண்மையான மதிப்பையும், கூடுதல் செலவுகளையும் மறைக்கின்றன.
தள்ளுபடி எனும் பொறி (The Discount Trap)
பல நேரங்களில், தள்ளுபடி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அடிப்படை விலை (Base Price) உயர்த்தப்படுகிறது. இது உங்களுக்கு சேமிப்பு கிடைப்பது போன்ற மாயையை உருவாக்கும். எனவே, விளம்பரங்களை நம்பாமல், அந்த பகுதியில் சமீபத்தில் விற்பனையான வீடுகளின் விலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். தள்ளுபடிக்குப் பிறகும் விலை அதிகமாக இருந்தால், அது லாபகரமான டீல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
RERA மற்றும் சட்டச் சரிபார்ப்பு
எந்தவொரு வீட்டையும் முன்பதிவு செய்யும் முன், அந்த ப்ராஜெக்ட் RERA-வில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும். விற்பனை பிரதிநிதிகளின் வார்த்தைகளை மட்டும் நம்பாமல், நிலத்தின் வில்லங்க சான்றிதழ் (Land Title) மற்றும் அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தை (Building Plans) ஒரு வழக்கறிஞர் மூலம் சரிபார்ப்பது எதிர்கால சட்டப் போராட்டங்களைத் தவிர்க்க உதவும்.
உண்மையான செலவைக் கணக்கிடுதல் (Total Cost of Ownership)
வீட்டின் விலையைத் தாண்டி GST, ஸ்டாம்ப் டியூட்டி, ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் இதர கட்டணங்கள் உங்களின் பட்ஜெட்டில் 10% முதல் 15% வரை கூடுதலாகச் சேர்க்கும். மேலும், அனைத்து சேமிப்பையும் முன்பணத்திற்கு (Down Payment) செலவிடாமல், உட்புற வேலைகள், பராமரிப்பு கட்டணம் மற்றும் மாதத்தவணை (EMI) செலுத்தப் போதுமான பணப்புழக்கத்தை (Liquidity Buffer) வைத்திருப்பது அவசியம். திட்டமிட்ட முதலீடு மட்டுமே சொத்தை சுமையாக மாற்றாமல் பாதுகாக்கும்.
