வீடு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதன் அசல் உரிமையாளர் மட்டுமின்றி, அவரது வாரிசுகள் அல்லது சொத்தை வாங்கியவர்களும் பில்டரிடம் வட்டி கோரலாம் என்று Bombay High Court முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
வீடு கட்டிக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டால், அந்தச் சொத்தின் அசல் வாங்குபவர் இறந்திருந்தாலோ அல்லது உரிமையாளர் மாறியிருந்தாலோ, அந்த வாரிசுகள் பில்டரிடம் இழப்பீடு (Interest) கோரலாம் என Bombay High Court உறுதிபடத் தெரிவித்துள்ளது. RERA சட்டத்தின் கீழ், இழப்பீடு கோரும் உரிமை என்பது நபரைச் சார்ந்ததல்ல, அது அந்தச் சொத்தைச் சார்ந்தது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், உரிமையாளர் மாறிவிட்டார் என்ற காரணத்தைச் சொல்லி பில்டர்கள் இனி தப்பிக்க முடியாது.
தவிர்க்க முடியாத காரணங்கள் (Force Majeure) என்ற வாதம் நிராகரிப்பு
முனிசிபல் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் தான் ப்ராஜெக்ட் நின்றது என பில்டர்கள் வைக்கும் வழக்கமான வாதத்தை நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. தேவையான அனுமதி வாங்குவதும், உரிய நேரத்தில் கட்டிடம் கட்டி முடிப்பதும் பில்டர்களின் அடிப்படைப் பொறுப்பு. இதில் ஏற்படும் நிர்வாகத் தாமதங்களைச் சொல்லி, அதன் நிதிச் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியாது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்த வழக்கில், ₹5.51 கோடி மதிப்பிலான சொத்து தொடர்பாக, சுமார் 12 ஆண்டுகள் தாமதம் (மார்ச் 2008 முதல் பிப்ரவரி 2020 வரை) ஏற்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பில்டர் ஆண்டுக்கு 9% வட்டி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, வாடிக்கையாளர்கள் 12% வட்டி கேட்டிருந்தாலும், விற்பனை ஒப்பந்தத்தில் (Sale Agreement) குறிப்பிடப்பட்ட வட்டி விகிதமே பொருந்தும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்தத் தீர்ப்பு, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சொத்து கைமாறினாலும், பில்டர்களின் பொறுப்பு மாறுவதில்லை என்பதை இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக மாற்றியுள்ளது.
