இந்தியாவில் முதல்முறையாக பாலிமர் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய RBI திட்டமிட்டுள்ளது. ஆரம்பகட்டமாக **₹10** மற்றும் **₹20** நோட்டுகள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் அச்சடிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், நீண்ட காலம் உழைக்கக்கூடிய நோட்டுகளை உருவாக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய முடிவை எடுத்துள்ளது. வரும் 2027 ஏப்ரல் மாதம் முதல், பாலிமர் அடிப்டையிலான ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ATM செலவுகளுக்கு முற்றுப்புள்ளி
புதிதாக வரவுள்ள இந்த நோட்டுகளின் அளவும், வடிவமைப்பும் தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுகளைப் போலவே இருக்கும். இதனால், வங்கிகள் தங்கள் ஏடிஎம் (ATM) மெஷின்களில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. கடந்த காலங்களில் ரூபாய் நோட்டுகளின் அளவு மாறியபோது, ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க வங்கிகளுக்குப் பல கோடி ரூபாய் செலவானது. அந்தச் சிக்கலைத் தவிர்க்கவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பமும் ஒப்பந்தமும்
இந்தத் திட்டத்தை பாரதிய ரிசர்வ் வங்கி நோட்டு முத்ரண் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL) முன்னெடுத்துள்ளது. இதற்கான டெண்டரில் Uflex உட்பட மொத்தம் 6 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அமெரிக்காவின் Spectra Systems நிறுவனத்துடன் இணைந்து Uflex களம் இறங்கியுள்ளது. குறிப்பாக, இந்த நோட்டுகள் விலங்குகளின் கொழுப்பு இல்லாத மூலப்பொருட்களைக் கொண்டு, இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப நீண்ட காலம் உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது RBI-யின் நிபந்தனை.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
ஆரம்பகட்டமாக, தலா 100 கோடி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன. இந்த சோதனை முயற்சியின் வெற்றியே, பாலிமர் நோட்டுகள் இந்திய கரன்சி முறையில் நிரந்தரமாக இடம்பிடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும். இந்த மாற்றம் வெற்றி பெற்றால், பேக்கேஜிங் மற்றும் பிரிண்டிங் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும் என்பதால், முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தின் முடிவுகளைக் கூர்ந்து கவனிக்கலாம்.
