இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ₹10 மற்றும் ₹20 மதிப்பில் 2 பில்லியன் பாலிமர் நோட்டுகளை அச்சிட்டு, சோதனை ஓட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளது. இதனால் கரன்சி நோட்டுகளின் ஆயுட்காலம் அதிகரிக்கும், பாதுகாப்பு மேம்படும், நீண்ட கால செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிமர் நோட்டுகள் அறிமுகம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் பணப் பரிவர்த்தனையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதன்படி, ₹10 மற்றும் ₹20 மதிப்புள்ள 200 கோடி பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகளை அச்சிட்டு, நாடு முழுவதும் சோதனை ஓட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ₹10 மற்றும் ₹20 நோட்டுகள் தான் மக்களிடையே அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், எளிதில் சேதமடைகின்றன. எனவே, இந்த சிறிய மதிப்புள்ள நோட்டுகளை முதலில் பாலிமர் கொண்டு மாற்றி, அதன் ஆயுளை நீட்டிக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் RBI திட்டமிட்டுள்ளது.
நோக்கம் என்ன?
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ₹5,000 கோடி ரூபாய் வரை புதிய கரன்சி நோட்டுகளை அச்சிடுவதற்கும், பழைய நோட்டுகளை அப்புறப்படுத்துவதற்கும் செலவாகிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் ₹50 லட்சம் கோடி மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் சேதமடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்றதாகிவிட்டன. பாலிமர் நோட்டுகள் சாதாரண காகித நோட்டுகளை விட 2 முதல் 3 மடங்கு அதிக காலம் உழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கரன்சி பராமரிப்பு செலவுகள் கணிசமாகக் குறையும்.
மேலும், பாலிமர் நோட்டுகள் மூலம் போலி நோட்டுகளைத் தடுப்பது எளிதாகும். இதில் clear windows, metallic numerals போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இணைக்க முடியும். ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் ஏற்கனவே பாலிமர் நோட்டுகளைப் பயன்படுத்தி, அதன் ஆயுள் 4 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றன.
சவால்கள் என்ன?
இருப்பினும், இந்த புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்துவதில் சில சவால்களும் உள்ளன. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ₹43 லட்சம் கோடி பணத்தை மாற்றுவதற்கு பெரிய அளவிலான திட்டமிடல் தேவை. மேலும், ஏடிஎம் இயந்திரங்கள், பணம் எண்ணும் இயந்திரங்கள் போன்றவற்றை பாலிமர் நோட்டுகளை கையாளும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்தியாவின் பல்வேறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் பாலிமர் நோட்டுகள் எப்படி செயல்படுகின்றன என்பதையும் RBI உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இந்த சோதனை ஓட்டங்களின் முடிவுகளைப் பொறுத்து, படிப்படியாக மற்ற மதிப்புள்ள நோட்டுகளையும் பாலிமருக்கு மாற்றும் திட்டம் வகுக்கப்படும். இது இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய நகர்வாக இருக்கும்.
