கூட்டு வங்கி கணக்கில் (Joint Account) 'Survivor' என்று இருப்பதாலேயே அதில் உள்ள பணம் முழுவதும் உங்களுக்கே சொந்தம் என நினைக்காதீர்கள். RBI விதிகளின்படி, நீங்கள் அந்தப் பணத்திற்கு ஒரு அறங்காவலர் (Trustee) மட்டுமே. இது குறித்து முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் என்ன?
இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் 'Either or Survivor' அல்லது 'Anyone or Survivors' முறையை வசதிக்காகப் பயன்படுத்துகின்றனர். கணக்கு வைத்திருப்பவர் ஒருவர் மறைந்தால், அந்தப் பணம் மற்றவருக்கு எளிதாகக் கிடைக்கும் என்பதே இதன் நோக்கம். ஆனால், இந்த 'ஆபரேஷனல்' அணுகல் என்பது அந்தப் பணத்தின் நிரந்தர உரிமையைக் குறிக்காது என்பதை பலர் புரிந்துகொள்வதில்லை.
சட்டப்பூர்வ உண்மை என்ன?
வங்கி கணக்கை 'Survivor' அணுகும்போது, அது ஒரு நிர்வாக வசதிக்காக மட்டுமே செய்யப்படுகிறது. உயிரிழந்தவரின் இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்தாலே வங்கி பணத்தை விடுவிக்கும். ஆனால், சட்டப்படி அந்தப் பணம் உயிரிழந்தவரின் வாரிசுகளுக்கு உரியது. Survivor என்பவர் அந்தப் பணத்திற்கு ஒரு அறங்காவலர் (Trustee) மட்டுமே. எனவே, உயிரிழந்தவரின் மற்ற சட்டப்பூர்வ வாரிசுகள் (குழந்தைகள், வாழ்க்கைத் துணை) உரிமை கோரினால், அந்தப் பணத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் Survivor-க்கு உண்டு.
குடும்பச் சண்டைகளைத் தவிர்க்க என்ன வழி?
பல நேரங்களில், Survivor அந்தப் பணத்தை முழுவதுமாகத் தனக்குச் சொந்தமானது என நினைத்துச் செலவு செய்கிறார். இது பிற்காலத்தில் பெரிய சட்டச் சிக்கல்களுக்கும் குடும்பத் தகராறுகளுக்கும் வழிவகுக்கும். வங்கியின் பணி வெறும் கணக்கை நிர்வகிப்பது மட்டுமே; உயில் (Will) அல்லது வாரிசுரிமையை முடிவு செய்வது அவர்களின் பொறுப்பல்ல.
நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
- உயில் (Will): பணத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கப் பதிவு செய்யப்பட்ட உயில் அவசியம்.
- Nomination: அனைத்து வங்கிக் கணக்குகளிலும் நாமினேஷன் விபரங்களைச் சரியாகப் பதிவு செய்யுங்கள்.
- செயல்முறை: ஒரு இணை-கணக்குதாரர் இறந்தவுடன், உடனடியாக வங்கியிடம் தெரிவித்து முறையான இறப்பு உரிமைகோரல் (Death claim) செயல்முறையைத் தொடங்குங்கள்.
- கவனத்திற்கு: இறந்தவரின் டெபிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் விவரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, பின்னாளில் வரக்கூடிய சட்டச் சிக்கல்களைக் குறைக்கும்.
