இந்தியாவில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பணமாகவோ அல்லது சொத்தாகவோ பரிசளிப்பது வரி விலக்கு கொண்டதுதான். ஆனால், அந்தப் பணத்தின் மூலம் வரும் வருமானத்திற்கு 'Clubbing' விதிகள் பொருந்தும். இது குறித்த தெளிவான புரிதல் இல்லையென்றால், வருமான வரித்துறையிடமிருந்து உங்களுக்கு சிக்கல்கள் வரலாம்.
இந்தியாவில் கணவன்-மனைவிக்குள் பணப் பரிமாற்றம் அல்லது சொத்து மாற்றம் செய்வது பொதுவானது. இதற்கு கிஃப்ட் டேக்ஸ் (Gift Tax) கிடையாது என்பதால், பலரும் இதை எளிதாகக் கருதுகிறார்கள். ஆனால், வருமான வரி சட்டம் 1961 மற்றும் 2025-ன் படி, நீங்கள் பரிசாகக் கொடுத்த மூலதனத்திலிருந்து வரும் வருமானத்திற்கு 'Clubbing' விதிகளின் கீழ் நீங்களே வரி கட்ட வேண்டியிருக்கும்.
Clubbing விதிகள் எப்படி செயல்படுகின்றன?
நீங்கள் உங்கள் மனைவிக்கு ஒரு தொகையை பரிசாக அளிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பணத்தை அவர் Fixed Deposit அல்லது வேறு முதலீடுகளில் போடும்போது, அதிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானம் உங்கள் வருமானமாகவே கருதப்படும். அதாவது, உங்கள் வருமான வரி கணக்கில்தான் (ITR) அந்தத் தொகையைச் சேர்க்க வேண்டும். அவர் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்திருந்தாலும், இந்த விதி மாறாது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய இரண்டு வகை வருமானங்கள்:
முதற்கட்ட வருமானம் (First-generation income): நீங்கள் பரிசாகக் கொடுத்த மூலதனத்திலிருந்து நேரடியாக வரும் லாபம் அல்லது வட்டி. இது உங்கள் கணக்கில் தான் காட்டப்பட வேண்டும்.
இரண்டாம் கட்ட வருமானம் (Second-generation income): அந்த முதல் லாபத்தை உங்கள் மனைவி மீண்டும் முதலீடு செய்து, அதிலிருந்து பெறும் வருமானம். இது உங்கள் மனைவிக்கு சொந்தமான வருமானமாகக் கருதப்பட்டு, அவருக்கு வரி விதிக்கப்படும். இதற்கு நீங்கள் முறையான ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்.
ஆவணங்களை பராமரிப்பதன் அவசியம்
தற்போது வருமான வரித்துறை AIS (Annual Information Statement) மற்றும் Form 26AS மூலம் அனைத்து பணப் பரிமாற்றங்களையும் தானியங்கி முறையில் கண்காணிக்கிறது. வருமானத்தை சரியாகக் காட்டத் தவறினால், வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருவது உறுதி.
விதிமீறினால் என்னாகும்?
முறையாக வரி கணக்கிடத் தவறினால், நிலுவைத் தொகையுடன் அபராதமும் வசூலிக்கப்படும். குறிப்பாக, வருமான வரி சட்டத்தின் பிரிவு 270A-ன் கீழ், வருமானத்தை மறைத்ததாகக் கருதப்பட்டு கடும் அபராதங்கள் விதிக்கப்படலாம். எனவே, பரிசாக வழங்கிய தேதி, முதலீடு செய்த விபரம் மற்றும் அதிலிருந்து வரும் லாபம் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பராமரிப்பதன் மூலம் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
