மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து மாதந்தோறும் வருமானம் பெற உதவும் ஒரு சிறந்த வழிமுறைதான் SWP. ஓய்வுக்காலத்தில் பணவீக்கத்திற்கு ஏற்ப வருமானத்தை தக்கவைக்க, மார்க்கெட் ஏற்ற இறக்கங்களை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான டிப்ஸ் இதோ.
SWP என்றால் என்ன?
ஓய்வு பெற்ற பிறகு, நிரந்தர வருமானத்திற்கு பலர் ஃபிக்சட் டெபாசிட்டுகளை நாடுகிறார்கள். ஆனால் அதற்கு மாற்றாக மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள Systematic Withdrawal Plan (SWP) தற்போது பிரபலமாகி வருகிறது. இதில், நீங்கள் முதலீடு செய்துள்ள யூனிட்களை குறிப்பிட்ட இடைவெளியில் (மாதம் அல்லது காலாண்டு) விற்று, பணமாக எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகை சந்தையில் தொடர்ந்து முதலீட்டில் இருப்பதால், அது பணவீக்கத்தை சமாளிக்க உதவும்.
சந்தை அபாயத்தை எப்படி தவிர்ப்பது?
SWP-ல் இருக்கும் ஒரு முக்கியமான சவால் 'Sequence-of-returns' ரிஸ்க். அதாவது, நீங்கள் பணம் எடுக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே சந்தை சரிந்தால், உங்கள் முதலீட்டு யூனிட்கள் அதிக அளவில் விற்கப்பட்டு, கையில் இருக்கும் கார்பஸ் (Corpus) விரைவில் காலியாகிவிடும். இதைத் தவிர்க்க, ஓரிரு வருட செலவிற்கான பணத்தை ஒரு Liquid Fund அல்லது சேமிப்புக் கணக்கில் வைப்பது புத்திசாலித்தனம். இதனால், சந்தை சரியும்போது உங்கள் முக்கிய முதலீட்டைத் தொடாமல், அவசர கால பணத்திலிருந்து செலவுகளை ஈடுகட்ட முடியும்.
பணவீக்கம் மற்றும் வரி சேமிப்பு
இன்று உங்களுக்குத் தேவைப்படும் தொகை, 5 அல்லது 10 ஆண்டுகளுக்குப் பிறகு போதுமானதாக இருக்காது. எனவே, பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, காலத்திற்கு ஏற்ப உங்கள் வித்ராயல் (Withdrawal) தொகையை மாற்றியமைக்க வேண்டும்.
வரி விஷயத்தில், SWP பாரம்பரிய வருமான முறைகளை விட சிறந்தது. உங்கள் மொத்த தொகையும் வருமானமாகக் கருதப்படாது; விற்கப்பட்ட யூனிட்களின் கேபிடல் கெயின்ஸ் (Capital Gains) மீது மட்டுமே வரி கணக்கிடப்படும். இது உங்கள் டேக்ஸ் சுமையை கணிசமாகக் குறைக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், SWP என்பது 'ஒருமுறை செய்துவிட்டு மறக்கக்கூடிய' திட்டம் அல்ல. சந்தை நிலவரம் மற்றும் உங்கள் தேவைக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஒருமுறை உங்கள் திட்டத்தை மறுஆய்வு (Review) செய்வது, உங்கள் ஓய்வுக்காலத்தை எந்த தடங்கலும் இல்லாமல் பாதுகாப்பாகக் கடக்க உதவும்.
