SSY திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் வட்டி விகிதம்:
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசாங்கத்தால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்தால், பிரிவு 80C-யின் கீழ் வரி விலக்கு பெறலாம். இந்த திட்டத்தின் கால அளவு 21 ஆண்டுகள். இதில், முதல் 15 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும். காம்பவுண்டிங் வட்டி (Compounding interest) மற்றும் வரி இல்லாத முதிர்வு (tax-free maturity) மூலம், ஒரு சிறிய தொகையை நீண்ட காலத்திற்கு பெரிய நிதியாக மாற்ற முடியும்.
தற்போதைய நிதிச்சூழலில் SSY:
உலகளாவிய சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையிலும், பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களிலும் SSY போன்ற அரசாங்க திட்டங்கள் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதன் 8.2% வட்டி விகிதம், தற்போது பல வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள் (Bank Fixed Deposits) வழங்கும் 6.25% முதல் 7.5% வரையிலான வட்டியை விட அதிகம். இதேபோல், மற்றொரு பிரபலமான வரி இல்லாத திட்டமான பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட் (PPF) தற்போது 7.1% வட்டி வழங்குகிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாத சேமிப்பாளர்களுக்கு SSY போன்ற சிறுசேமிப்பு திட்டங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளன.
முக்கிய வரம்புகள் மற்றும் கவலைகள்:
SSY ஒரு பாதுகாப்பான திட்டம் என்றாலும், நீண்ட கால நிதி இலக்குகளுக்கு இது மட்டும் போதுமானதா என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக, கல்விக்கான பணவீக்கம் (Education Inflation) சில துறைகளில் ஆண்டுக்கு 12% கூட அதிகரிக்கலாம். இந்நிலையில், SSY-ன் நிலையான வட்டி விகிதம் இதை ஈடுகட்டுமா என்பது சந்தேகம். மேலும், ஆண்டுக்கு ₹1.5 லட்சம் என்ற முதலீட்டு வரம்பு, மகளின் உயர்கல்வி அல்லது திருமணத்திற்கான முழு செலவையும் ஈடு செய்ய போதுமானதாக இருக்காது. திட்டத்தில் 50% தொகை வரை மட்டுமே குழந்தை 18 வயதை கடந்த பிறகு உயர்கல்விக்காக எடுக்க முடியும். இந்த நிதியை குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதும் ஒரு வரம்பாகும். 21 வருட முதிர்வு காலமும், சந்தை சார்ந்த முதலீடுகளுடன் ஒப்பிடும்போது நீண்டதாக கருதப்படுகிறது.
பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறை:
SSY நிச்சயம் ஒரு நல்ல ஆரம்பகட்ட முதலீடாக இருக்கும். அதன் அரசாங்க உத்தரவாதம் (Government Guarantee) ஒரு பெரிய பிளஸ். ஆனால், உயர்கல்வி போன்ற பெரிய இலக்குகளை அடைய, SSY உடன் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்டுகளில் (Mutual Funds) சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்வதை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம், பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை பெற்று, எதிர்கால தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும்.
