45 வயதில் முன்கூட்டியே ஓய்வு பெறுவது பலரது கனவு. ஆனால், பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளைக் கணக்கில் கொண்டால், நீங்கள் சேமிக்கும் தொகை போதாமல் போகலாம்.
பலர் 45 வயதிற்குள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று, சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள். ஆனால், வெறும் பணத்தைச் சேமிப்பது மட்டும் இதற்கு போதாது. எதிர்காலச் செலவுகள் நாம் நினைப்பதை விட மிக வேகமாக உயரும் என்பதே கசப்பான உண்மை.
பணவீக்கத்தின் (Inflation) தாக்கம்
ஓய்வு காலத்திற்குத் திட்டமிடுபவர்களுக்கு மிகப்பெரிய சவால் பணவீக்கம் தான். இன்று உங்கள் குடும்ப செலவு ₹60,000 ஆக இருந்தால், 6% வருடாந்திர பணவீக்க விகிதத்தின்படி, 45 வயதை அடையும் போது அதே வாழ்க்கை முறைக்கு மாதம் ₹1.14 லட்சம் தேவைப்படும். அடுத்த 40 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால், நீங்கள் சேர்க்க வேண்டிய மொத்தத் தொகை சுமார் ₹3.9 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
மருத்துவச் செலவுகள் மற்றும் சந்தை அபாயம்
வேலையில் இருக்கும்போது கிடைக்கும் நிறுவனத்தின் ஹெல்த் இன்சூரன்ஸ், நீங்கள் ஓய்வு பெற்றதும் கிடைக்காது. வயது ஏற ஏற மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் என்பதால், அது உங்கள் சேமிப்பைத் துரிதமாகக் கரைக்கும். மேலும், நீங்கள் ஓய்வு பெற்றவுடன் சந்தை சரிந்தால் (Market Volatility), நஷ்டத்தில் முதலீடுகளை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். இதைத் தவிர்க்க, குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் செலவிற்கான பணத்தை லிக்விட் நிதியிலோ (Liquid fund) அல்லது பாதுகாப்பான அசட்களிலோ வைத்திருக்க வேண்டும்.
மாற்றுத் திட்டங்கள்
கணக்கு சரியாக வரவில்லை என்றால், ஓய்வு பெறும் வயதை ஒரு 5 ஆண்டுகள் தள்ளிப் போடலாம். இது காம்பவுண்டிங் (Compounding) முறையில் உங்கள் பணம் வளர அதிக நேரம் கொடுக்கும். அல்லது, ஓய்வு பெற்ற பிறகும் பகுதிநேர வேலை அல்லது கன்சல்டிங் பணிகளில் ஈடுபட்டு, வருமானத்தை உருவாக்கலாம். வருடத்திற்கு ஒருமுறை உங்கள் செலவுகளை மதிப்பீடு செய்து, திட்டத்தை மாற்றியமைப்பது மட்டுமே உங்கள் கனவை நிஜமாக்கும்.
