ஓய்வுக்கால திட்டமிடலில் பலரும் ஒரு குறிப்பிட்ட தொகையை (Lump sum) இலக்காக வைப்பதே தவறு. அதற்கு பதிலாக, டிவிடெண்ட், ரெண்டல் மற்றும் அன்யூட்டி போன்ற வழிகளில் பணவீக்கத்தை சமாளிக்கும் மாதாந்திர வருமானத்தை உருவாக்குவதே நீண்ட கால பாதுகாப்பை தரும்.
பலர் ஓய்வுக்காலத்திற்கு 5 கோடி அல்லது 10 கோடி என ஒரு பெரிய இலக்கை நிர்ணயிக்கிறார்கள். ஆனால், இந்த அணுகுமுறை தேவையற்ற பதற்றத்தையே தருகிறது. அதற்கு பதிலாக, பணவீக்கத்திற்கு ஏற்ப உங்கள் ஓய்வுக்கால மாதாந்திர செலவுகளை கணக்கிட்டு, அதற்கேற்ப வருமான வழிகளை உருவாக்குவது சிறந்தது.
மாதாந்திர வருமானத்தின் அவசியம்
கையில் பெரிய தொகை இருந்தாலும், சந்தை சூழல் மாறும்போது அதை சரியாக நிர்வகிக்காவிட்டால், அந்த பணம் விரைவில் கரைந்துவிடும். அதற்கு பதிலாக, Dividend தரும் பங்குகள், வாடகை வருமானம், மற்றும் Senior Citizen Savings Scheme (SCSS) போன்ற அரசு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், அசலை கரைக்காமல் மாதாந்திர வருமானத்தை பெறலாம். இது ஒரு பாதுகாப்பு அரணாக செயல்படும்.
கடன் மற்றும் கூட்டு வட்டி (Compounding)
ஓய்வுக்காலத்திற்கு மிக முக்கியமானது உங்கள் நிதிநிலை அறிக்கையின் பலம். கடன் இல்லா வாழ்க்கை மிக முக்கியம். குறிப்பாக ஹோம் லோன் போன்ற அதிக வட்டி கொண்ட கடன்களை ஓய்வு பெறும் முன்பே அடைத்துவிட வேண்டும். மேலும், சிறிய தொகையாக இருந்தாலும் SIP முறையில் முதலீடு செய்து, கூட்டு வட்டியின் பலனை பெற early starting மிக முக்கியம்.
பணவீக்கம் மற்றும் மருத்துவ செலவு அபாயங்கள்
இந்தியாவில் மருத்துவ பணவீக்கம் பொதுவான நுகர்வோர் குறியீட்டை விட (CPI) மிக வேகமாக உயர்கிறது. ஒரு பெரிய அவசர கால மருத்துவ செலவு உங்கள் மொத்த சேமிப்பையும் காலி செய்துவிடும். எனவே, நல்ல மருத்துவ காப்பீடு (Medical Insurance) மற்றும் அவசர கால நிதி (Emergency Fund) வைத்திருப்பது மிக அவசியம். சந்தை இறக்கத்தில் இருக்கும்போது அவசரத்தில் உங்கள் பங்குகளை விற்பதை தவிர்க்க, இது உதவும்.
முதலீட்டு வியூகம்
வேலை பார்க்கும் இளமை காலத்தில், பணவீக்கத்தை வெல்ல ஈக்விட்டி (Equities) போன்ற வளர்ச்சி சார்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். ஓய்வுக்காலம் நெருங்கும்போது, மூலதன பாதுகாப்பு மற்றும் வருமானம் தரும் திட்டங்களுக்கு மாற வேண்டும். முடிந்தால், ஓய்வுக்கு பிறகும் ஆலோசனை (Consulting) பணிகளில் இருப்பது, உங்கள் முதலீட்டு காலத்தை நீட்டித்து கூடுதல் வருமானத்தை தரும்.
