அமெரிக்க மார்க்கெட் தரவுகளின் அடிப்படையில் உருவான 4% வித்ட்ராயல் ரூல், இந்திய சூழலுக்கு ஏற்றதல்ல. அதிக பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, 'Bucket' போன்ற நெகிழ்வான உத்திகளை கையாள்வது அவசியம்.
ரிட்டையர்மென்ட் திட்டமிடலில், ஓய்வுக்காலத்தின் போது ஒவ்வொரு ஆண்டும் போர்ட்ஃபோலியோவில் இருந்து 4% பணத்தை எடுத்து செலவு செய்யலாம் என்ற விதி உலகம் முழுவதும் பிரபலமானது. ஆனால், இந்த விதி அமெரிக்க சந்தை சூழலுக்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவில் இதை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது, உங்கள் கையில் உள்ள பணம் காலத்திற்கு முன்பே தீர்ந்துபோகும் அபாயத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் ஏன் இந்த விதி சவாலானது?
இந்தியாவில் பொதுவான பணவீக்கம் 6% முதல் 7% வரை இருந்தாலும், முதியவர்களுக்கு மிக முக்கியமான மருத்துவ பணவீக்கம் 10% முதல் 14% வரை உள்ளது. ஒருவேளை உங்கள் முதலீடு 5-6% வருமானம் மட்டுமே தரும் நிலையில் இருந்தால், பணவீக்கத்தினால் உங்கள் வாங்கும் திறன் (Purchasing Power) ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே செல்லும்.
மார்க்கெட் வீழ்ச்சியின் பாதிப்பு (Sequence of Returns Risk)
ஓய்வு பெற்ற முதல் சில ஆண்டுகளிலேயே பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தால், உங்கள் முதலீட்டை குறைந்த விலையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது உங்கள் போர்ட்ஃபோலியோ மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதைத் தடுத்துவிடும்.
தீர்வாக 'Bucket Strategy'
இந்த ரிஸ்க்கைத் தவிர்க்க, பணத்தை பிரிக்க வேண்டும்:
- Cash Bucket: அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கான செலவுக்குத் தேவையான பணத்தை வங்கி டெபாசிட் அல்லது லிக்விட் ஃபண்டுகளில் வைத்திருக்க வேண்டும்.
- Growth Bucket: மீதமுள்ள பணத்தை நீண்ட கால வளர்ச்சிக்காக ஈக்விட்டி மற்றும் பிற முதலீடுகளில் வைக்க வேண்டும்.
சந்தை சரியும் காலங்களில், 'Cash Bucket'-ல் உள்ள பணத்தை செலவு செய்துவிட்டு, ஈக்விட்டி முதலீடுகளை விற்காமல் வைத்திருப்பதன் மூலம் உங்கள் பணம் மீண்டு வர வழி கிடைக்கும். இது தவிர, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அவ்வப்போது உங்கள் செலவுகளை மாற்றியமைக்கும் (Guardrails) முறையைப் பின்பற்றுவதும் மிக அவசியம்.
