போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டில் (Time Deposit) பணத்தை ஒரே தவணையாக போடாமல், வெவ்வேறு கால அளவுகளில் பிரித்து முதலீடு செய்யும் 'டெபாசிட் லேடரிங்' உத்தி, பணத்தை தேவைப்படும் போது எளிதாக எடுக்கவும், அதிக லாபம் பெறவும் உதவுகிறது. இதன் மூலம், வட்டி விகித மாற்றங்களை சமாளித்து, உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம்.
இந்தியாவில் பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோருக்கு, போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் எப்போதும் ஒரு நம்பகமான தேர்வாக இருந்து வருகின்றன. இந்த வரிசையில், 'டெபாசிட் லேடரிங்' (Deposit Laddering) என்பது ஒரு சிறந்த உத்தியாகும். பெரிய தொகையை ஒரே நீண்ட கால டெபாசிட்டில் போடுவதற்கு பதிலாக, மொத்த முதலீட்டை வெவ்வேறு மெச்சூரிட்டி (Maturity) தேதிகளுடன் கூடிய பல சிறிய டெபாசிட்களாக பிரித்து போடுவதுதான் இதன் அடிப்படை.
பணத்தை கையாள்வதும், லாபமும்
நீங்கள் உங்களின் மொத்த பணத்தையும் ஐந்து வருட நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட்டில் (National Savings Time Deposit) முதலீடு செய்தால், அந்த பணம் முழு ஐந்து வருடங்களுக்கும் லாக் ஆகிவிடும். அப்படி இருக்கும் போது, திடீரென பணம் தேவைப்பட்டால், நீங்கள் அந்த டெபாசிட்டை பாதியிலேயே பிரிக்க வேண்டியிருக்கும். இதனால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது எதிர்பார்த்ததை விட குறைவான வட்டி கிடைக்கலாம்.
ஆனால், 'லேடரிங்' முறையில், உங்களின் பணத்தை 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருட டெபாசிட்களாக பிரித்து போடலாம். இப்படி பிரித்து போடுவதால், ஒவ்வொரு வருடமும் ஒரு டெபாசிட் மெச்சூர் ஆகும். இதனால், உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பணம் எளிதாக கிடைக்கும். ஒருவேளை பணம் தேவைப்படவில்லை என்றால், மெச்சூர் ஆன பணத்தை மீண்டும் ஒரு புதிய நீண்ட கால டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், பள்ளி கட்டணம் அல்லது மருத்துவ செலவுகள் போன்ற குறுகிய கால தேவைகளுக்கு, உங்களின் நீண்ட கால முதலீட்டை பாதியில் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
நன்மைகள் மற்றும் சவால்கள்
இந்த உத்தி, அதிக வட்டி விகிதத்தை பெறுவதை விட, பணத்தை கையாளும் நெகிழ்வுத்தன்மைக்கும் (Flexibility), வருமானத்தில் உள்ள கணிக்கக்கூடிய தன்மைக்கும் (Predictability) முக்கியத்துவம் கொடுக்கிறது. பொதுவாக, இந்தியா போஸ்ட் ஒரு வருட டெபாசிட்டுகளுக்கு சுமார் 6.9% வட்டியும், ஐந்து வருட டெபாசிட்டுகளுக்கு சுமார் 7.5% வட்டியும் வழங்குகிறது. இந்த முறையில் முதலீடு செய்வதால், உங்களுக்கு இந்த இரண்டு வட்டி விகிதங்களும் கிடைக்கும்.
இதில் உள்ள முக்கிய ரிஸ்க் என்னவென்றால், ஒருமுறை நீங்கள் பணத்தை டெபாசிட் செய்த பிறகு, சந்தையில் வட்டி விகிதம் உயர்ந்தால், அந்த குறிப்பிட்ட டெபாசிட் மெச்சூர் ஆகும் வரை உங்களால் அதிக வட்டியை பெற முடியாது. மறுபுறம், வட்டி விகிதம் குறைந்தால், நீங்கள் ஏற்கனவே அதிக வட்டியில் முதலீடு செய்திருப்பதால் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.
ரிஸ்க் மற்றும் கவனிக்க வேண்டியவை
இந்த டெபாசிட்கள் அரசு backed என்பதால், இதில் பாதுகாப்பு அதிகம். ஆனால், பணவீக்கத்தின் (Inflation) தாக்கம் இதில் உண்டு. நீண்ட காலத்தில், வட்டி வருமானத்தை விட பணவீக்கம் அதிகமாக உயர்ந்தால், உங்கள் சேமிப்பின் உண்மையான மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. மேலும், ஆறு மாதங்களுக்குப் பிறகு பணத்தை முன்கூட்டியே எடுத்தாலும், பணம் எடுத்த நேரத்தைப் பொறுத்து வட்டி விகிதம் குறைக்கப்படும். இது உங்கள் மொத்த வருமானத்தை பாதிக்கலாம்.
இந்த உத்தியை பயன்படுத்தும் முதலீட்டாளர்கள், அரசிடம் இருந்து வரும் வட்டி விகித அறிவிப்புகளை (Quarterly basis) தொடர்ந்து கவனிக்க வேண்டும். உங்களின் தனிப்பட்ட பணப்புழக்க தேவைகளுக்கு (Cash flow needs) ஏற்ப இந்த லேடரிங்கை அமைத்து, அவ்வப்போது மாறும் வட்டி விகிதங்களை கண்காணிப்பது, இந்த உத்தியை திறம்பட வைத்திருக்க உதவும்.
