ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), ஓய்வூதிய சேமிப்பையும் கட்டாய மருத்துவ காப்பீட்டையும் இணைக்கும் 'NPS Swasthya' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓய்வுக்காலத்திற்கு பிறகு மருத்துவ செலவுகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை பலருக்கும் உண்டு. இதற்கு தீர்வாக PFRDA கடந்த செப்டம்பர் 18, 2026 அன்று 'NPS Swasthya' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே, நீண்டகால முதலீட்டுடன் மருத்துவ பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதுதான்.
சூப்பர் டாப்-அப் பாலிசி
இந்த திட்டத்தில் சேருபவர்கள் கண்டிப்பாக ஒரு 'சூப்பர் டாப்-அப்' (Super Top-up) மருத்துவ காப்பீட்டு பாலிசியை வைத்திருக்க வேண்டும். பெரிய அளவிலான மருத்துவ செலவுகள் ஏற்படும்போது, இந்த காப்பீடு ஒரு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். NPS முதலீட்டுடன் சேர்த்து இந்த பாலிசியையும் பராமரிப்பது அவசியம்.
மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கும் வசதி
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, அவசர மருத்துவ செலவுகளுக்காக உங்களது சேமிப்பில் 25% வரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புதான். ஆனால், இந்த பணம் நேரடியாக உங்களுக்கு கைக்கு கிடைக்காது. மாறாக, மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கப்படுவதால் (Direct Settlement), பணத்தை கையாளும் சிரமம் குறையும்.
தகுதிகள் மற்றும் கட்டணங்கள்
- தகுதி: 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்; 85 வயது வரை புதுப்பிக்க முடியும்.
- காப்பீடு: கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கு 'Family Floater' காப்பீடு உண்டு (பெற்றோருக்கு கிடையாது).
- காப்பீட்டு தொகை: ₹1 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை.
- ஆரம்ப முதலீடு: குறைந்தபட்சம் ₹1,000 NPS கணக்கிலும், குறிப்பிட்ட பிரீமியத்தையும் செலுத்த வேண்டும். அதன் பிறகு வெறும் ₹10 வழக்கமான முதலீடு போதும்.
- கூடுதல் கட்டணம்: சுகாதார மேலாண்மைக்காக ஆண்டுக்கு ₹200 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.
முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் முன், சந்தையில் உள்ள பிற மருத்துவ காப்பீட்டு திட்டங்களுடன் பிரீமியம் மற்றும் கவரேஜ் வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுப்பது புத்திசாலித்தனம்.
