வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் (NRIs) தங்களது மொபைல் நம்பர் செயலிழப்பால் வங்கி பரிவர்த்தனை செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதைத் தவிர்க்கவும், FEMA விதிகளின்படி அபராதங்களைத் தவிர்க்கவும், சேமிப்புக் கணக்குகளை NRE அல்லது NRO கணக்குகளாக மாற்றுவது அவசியம்.
மொபைல் எண் சிக்கல்: ஒரு பெரிய தடையாக மாறியுள்ளது
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு தங்களது இந்திய வங்கி கணக்குகள், பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை நிர்வகிக்க இந்திய மொபைல் எண் மிக முக்கியம். ஆனால், ரோமிங் அல்லது ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் பலரது எண்கள் செயலிழந்து வருகின்றன. இதனால் OTP பெற முடியாமல், தங்களது சொத்துக்களை நிர்வகிக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். இந்த சூழலில், மீண்டும் அணுகலைப் பெற இந்தியாவுக்கு நேரில் வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
FEMA விதிமுறை மீறல் - ஆபத்தான அபராதங்கள்
வெளிநாட்டிற்கு சென்ற பிறகும், பல NRIs தங்கள் பழைய ரெசிடென்ட் சேமிப்புக் கணக்கை (Resident Savings Account) பயன்படுத்துகின்றனர். இது FEMA விதிகளின்படி தவறானது. குடியுரிமை மாறியவுடன், இந்த கணக்குகளை NRE அல்லது NRO கணக்குகளாக மாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், கணக்குகள் முடக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட தொகையைப் போல 3 மடங்கு வரை அபராதம், ₹2,00,000 வரை நிலையான அபராதம் மற்றும் தினசரி அபராதங்கள் விதிக்கப்படலாம்.
RBI மற்றும் SEBI-ன் அதிரடி மாற்றங்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க ஜூன் 2026-ல், ரிசர்வ் வங்கி (RBI) முதலீட்டு வரம்புகளை உயர்த்தியுள்ளது. இப்போது தனிப்பட்ட முதலீட்டாளர்கள் இந்திய கம்பெனிகளில் 10% வரை பங்குகளை வைத்திருக்கலாம், மொத்த வரம்பு 24% ஆக உள்ளது.
அதேபோல், ஆகஸ்ட் 14, 2026 அன்று SEBI ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிவரும் காலங்களில், முழுமையான டிஜிட்டல் மற்றும் ரிமோட் (Remote) முறையில் KYC செய்ய வழிவகை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு நேரில் வர வேண்டிய அவசியமின்றி KYC-யை எளிதாக முடிக்க முடியும்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
- வங்கி கணக்கில் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தற்போதைய வெளிநாட்டு மொபைல் எண்ணை உடனே அப்டேட் செய்யுங்கள்.
- உங்கள் வங்கி NRE/NRO கணக்கிற்கு சர்வதேச மொபைல் எண்களை ஆதரிக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.
- அனைத்து ரெசிடென்ட் கணக்குகளையும் உரிய வகைப்பாட்டிற்கு மாற்றியதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
