National Pension System (NPS) முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நிர்வகிக்க ஆக்டிவ் சாய்ஸ் (Active Choice) அல்லது ஆட்டோ சாய்ஸ் (Auto Choice) ஆகிய இரண்டு வழிகளை தேர்வு செய்யலாம். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் ஓய்வூதிய காலத்தை பொறுத்து இதில் எது சிறந்தது என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலீடு செய்பவர்கள், தங்கள் ஓய்வுக்கால நிதியை தாங்களே நிர்வகிக்க இரண்டு தனித்துவமான வாய்ப்புகள் உள்ளன. இதில் எதைத் தேர்வு செய்வது என்பது, உங்கள் இலக்குகள் மற்றும் சந்தை அபாயத்தை கையாளும் திறனைப் பொறுத்தது.
ஆக்டிவ் சாய்ஸ் (Active Choice): நீங்களே முடிவெடுங்கள்
முதலீட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு இது ஏற்றது. இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை நான்கு வெவ்வேறு அசெட் கிளாஸ்களில் பிரித்து முதலீடு செய்யலாம்:
- Equity (Asset Class E)
- Corporate Debt (Asset Class C)
- Government Securities (Asset Class G)
- Alternative Investment Funds (Asset Class A)
இந்த முறையில் நீங்கள் சொந்தமாக போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, அவ்வப்போது மாற்றங்களைச் செய்ய வேண்டும். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நீங்களே முடிவெடுக்க முடியும் என்பது இதன் பிளஸ். ஆனால், ஓய்வுக்காலம் நெருங்கும்போது அதிக ரிஸ்க் எடுக்காமல், பாதுகாப்பான முதலீடுகளுக்கு (Debt) மாற்றுவது போன்ற வேலைகளை நீங்களே சரியாகச் செய்ய வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், ரிஸ்க் அதிகமாக வாய்ப்புள்ளது.
ஆட்டோ சாய்ஸ் (Auto Choice): தானியங்கி முதலீடு
முதலீட்டை கவனித்துக்கொள்ள நேரம் இல்லாதவர்களுக்கும், ஒழுக்கமான முதலீட்டு முறையை விரும்புபவர்களுக்கும் இது சிறந்தது. உங்கள் வயதிற்கு ஏற்ப, பென்ஷன் ஃபண்ட் மேனேஜர் தானாகவே அசெட் ஒதுக்கீட்டை மாற்றியமைப்பார்.
இளமைப் பருவத்தில் ரிஸ்க் எடுக்க Equity பங்குகளில் அதிக கவனம் செலுத்தப்படும். வயது அதிகரிக்க அதிகரிக்க, முதலீடு படிப்படியாக பாதுகாப்பான Debt கருவிகளுக்கு மாற்றப்படும். இதில் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப LC75 (Aggressive), LC50 (Moderate) அல்லது LC25 (Conservative) ஆகிய ரிஸ்க் நிலைகளைத் தேர்வு செய்யலாம்.
இறுதி முடிவு யாருக்கு?
உங்களுக்கு சந்தையைப் பற்றி ஓரளவு புரிதல் இருந்து, முதலீட்டை அடிக்கடி கண்காணிக்க முடியும் என்றால் 'ஆக்டிவ் சாய்ஸ்' உங்களுக்கு உதவும். ஆனால், எந்தக் குழப்பமும் இன்றி தானாகவே முதலீடு வளர வேண்டும் என நினைப்பவர்களுக்கு 'ஆட்டோ சாய்ஸ்' பாதுகாப்பானது. எதுவாக இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை உங்கள் NPS கணக்கை சரிபார்ப்பது மிகவும் அவசியம்.
