நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ கடன் ஜாமீன் (Loan Guarantor) போடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. கடன்பெற்றவர் தவணை செலுத்தத் தவறினால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நேரடியாகப் பாதிப்பதோடு, எதிர்காலத்தில் நீங்கள் கடன் பெறுவதையும் கடினமாக்கும்.
பலர் உறவுக்காகவோ அல்லது நட்புக்காகவோ யோசிக்காமல் கடன் ஜாமீன் கையெழுத்திடுகின்றனர். ஆனால், சட்டப்படி நீங்கள் அந்த கடனுக்கு ஒரு secondary debtor ஆகிவிடுகிறீர்கள். இது வெறும் கையெழுத்து அல்ல, இது ஒரு சட்ட ஒப்பந்தம்.
சட்ட ரீதியான சிக்கல்கள் (Co-extensive Liability)
இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்படி (Indian Contract Act, 1872), பிரிவு 128-ன் கீழ், கடன் வாங்கியவருக்கும் ஜாமீன் போட்டவருக்கும் சமமான பொறுப்பு உண்டு. வங்கிகள் கடன் வாங்கியவரை அணுகுவதற்கு முன்பே, ஜாமீன் போட்டவரிடம் நிலுவைத் தொகையை (அபராதம் உட்பட) கேட்க சட்டப்படி உரிமை உண்டு.
கிரெடிட் ஸ்கோரில் தாக்கம்
ஜாமீன் கையெழுத்திட்டாலே உங்கள் CIBIL ரிப்போர்ட்டில் அந்தக் கடன் இடம்பெற்றுவிடும். கடன்பெற்றவர் தவணை தவறினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிரடியாகச் சரிந்துவிடும். இதனால் பிற்காலத்தில் உங்களுக்குத் தேவைப்படும் பர்சனல் லோன், கார் லோன் அல்லது ஹோம் லோன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது அதிக வட்டி விகிதத்தில் கிடைக்கலாம்.
ஜாமீன் பொறுப்பிலிருந்து விலகுவது எப்படி?
ஒப்பந்தம் போட்ட பிறகு, ஜாமீன் பொறுப்பிலிருந்து விலகுவது மிகவும் கடினம். கடன்பெற்றவர் மாற்று நபர் ஒருவரை ஜாமீனாக அறிமுகப்படுத்தினாலோ, கூடுதல் பிணையம் (Collateral) வழங்கினாலோ அல்லது முழு கடனையும் அடைத்தாலோ மட்டுமே வங்கி உங்களை விடுவிக்கும்.
முதலீட்டாளர்களுக்கான அறிவுரை
ஜாமீன் போடுவதற்கு முன் வங்கியைப் போலவே நீங்களும் சிந்திப்பது அவசியம். கடன்பெற்றவரின் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு நிலைத்தன்மையை ஆராயுங்கள். மிக மோசமான சூழலில் (Worst-case scenario), உங்கள் சேமிப்பிலிருந்து அந்தத் தொகையைச் செலுத்தும் அளவுக்கு உங்கள் நிதிநிலை இருக்கிறதா என்று கணக்கிடுங்கள்.
