Income Tax Appellate Tribunal (ITAT) வெளியிட்ட புதிய உத்தரவின்படி, இனி NRIs தங்களின் சொத்து விற்பனையின் போது ஏற்படும் பயணச் செலவுகளை, அந்த விற்பனைக்காக மட்டுமே செலவிடப்பட்டிருந்தால் மட்டுமே வரி விலக்காக கோர முடியும். குடும்ப சுற்றுலா அல்லது தனிப்பட்ட பயணங்களை இதில் சேர்க்க முடியாது.
இந்தியாவில் சொத்துக்களை விற்பனை செய்யும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRIs) இதுவரை பயணச் செலவுகளை கேபிடல் கெய்ன்ஸ் (Capital Gains) கணக்கீட்டில் காட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், இனி இது அவ்வளவு எளிதல்ல.
தீர்ப்பின் முக்கிய அம்சம்
ITAT பெங்களூரு அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பின்படி, Income-tax Act 1961-ன் பிரிவு 48-ன் கீழ் வரி விலக்கு பெற வேண்டுமானால், அந்தப் பயணம் சொத்து விற்பனைக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் கோரிய ₹12.01 லட்சம் பயணச் செலவை, அந்தப் பயணம் விற்பனை பத்திரத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது எனக் கூறி நீதிமன்றம் நிராகரித்தது.
ஆதாரங்கள் அவசியம் (Documentation)
வருமான வரித்துறை இப்போது தரவுகளை (Data Analytics) மிகத் துல்லியமாக கண்காணிக்கிறது. எனவே, நீங்கள் கோரும் ஒவ்வொரு செலவிற்கும் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் பில்கள் மற்றும் சொத்து பதிவுடன் தொடர்புடைய கடிதங்கள் என வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். குடும்பத்துடன் மேற்கொண்ட பயணங்களை இதில் சேர்த்தால், உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
சாதகமான அம்சங்கள்
பயணச் செலவுகளில் கடுமையான விதிகளை விதித்த அதே வேளையில், 'Cost of Acquisition' கணக்கீட்டில் சில சலுகைகளையும் ITAT வழங்கியுள்ளது:
- ₹21.60 லட்சம் மதிப்பிலான ஹோம் லோன் வட்டியை, Section 24(b)-ன் கீழ் நீங்கள் கோரவில்லை என்றால், அதை சொத்து அடக்க விலையில் சேர்த்துக்கொள்ளலாம்.
- மெயின்டனன்ஸ் டெபாசிட் மற்றும் பயன்பாட்டு பாதுகாப்பு வைப்புத் தொகைகளும் அடக்க விலையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த மாற்றங்கள் மூலம் இண்டெக்ஸேஷன் (Indexation) பலனைப் பெற்று, நீண்டகால மூலதன ஆதாய வரியைக் குறைக்க முடியும். எனினும், முறையான ஆவணங்களை பராமரிப்பது மட்டுமே வரித்துறை விசாரணையில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.
