சொந்தமாக வீடு வாங்கிவிட்டு, வாடகை வீட்டிலும் வசிக்கும் மக்கள், தாராளமாக ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் (HRA) மற்றும் ஹோம் லோன் மீதான வரிச்சலுகைகளை பெறலாம். இது பழைய வருமான வரி விதிப்பு முறையை (Old Tax Regime) பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
இரட்டை வரிச் சலுகை: இது எப்படி சாத்தியம்?
பல இந்தியர்கள் சொந்தமாக வீடு வாங்கிவிட்டு, வேலையின் காரணமாக அல்லது வேறு சில காரணங்களுக்காக வாடகை வீட்டிலும் வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இரண்டுக்குமான வரிச் சலுகைகளையும் பெறுவது சாத்தியமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஆம், பழைய வருமான வரி விதிப்பு முறையை (Old Tax Regime) தேர்வு செய்தால், உங்களால் ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் (HRA) மற்றும் நீங்கள் வாங்கிய வீட்டுக்கான ஹோம் லோன் மீதான வட்டிக்கு வரி விலக்கு (Section 24(b) & 80C) இரண்டையும் பெற முடியும்.
HRA சலுகை பெற: உங்கள் சம்பளத்தில் HRA ஒரு பகுதியாக இருக்க வேண்டும், நீங்கள் வசிக்கும் வீடு உங்களுடையதாக இருக்கக் கூடாது, மற்றும் வாடகை ஒப்பந்தம் (Rent Receipt) சரியாக இருக்க வேண்டும்.
Home Loan சலுகை பெற: வீட்டின் டாக்குமெண்ட் கிடைத்த நிதி ஆண்டிலிருந்தே, வீட்டுக் கடன் வாங்கியவர்கள் வட்டி மற்றும் அசலுக்கு வரி விலக்கு கோரலாம். இதற்காக, நீங்கள் வாடகை ரசீதுகள் மற்றும் வட்டிச் சான்றிதழ்களை உங்கள் நிறுவனத்திடம் அல்லது வருமான வரி தாக்கல் செய்யும்போது சமர்ப்பிக்க வேண்டும்.
பழைய vs புதிய வரி விதிப்பு முறை
இந்த இரட்டை வரிச் சலுகையைப் பெறுவதில், நீங்கள் எந்த வரி விதிப்பு முறையை தேர்வு செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். பழைய வரி விதிப்பு முறை, முதலீடுகள் மற்றும் கடன்களை ஊக்குவிக்கும் வகையில் பல விலக்குகளை வழங்குகிறது. ஆனால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பு முறை (New Tax Regime), குறைந்த வரி விகிதங்களுடன் பெரும்பாலான வரி விலக்குகளை ரத்து செய்துவிட்டது.
பழைய வரி விதிப்பு முறையில், நீங்கள் செலுத்தும் வீட்டுக் கடன் வட்டி, வாடகை வருமானத்தை விட அதிகமாக இருந்தால், அதை 'வீட்டுச் சொத்து இழப்பு' (Loss from House Property) என கணக்கிட்டு, மற்ற வருமானங்களுடன் ஈடுசெய்யலாம். இந்த இழப்பை ஆண்டுக்கு ₹2 லட்சம் வரை பயன்படுத்தலாம். மீதமுள்ள தொகையை அடுத்த 8 ஆண்டுகள் வரை கொண்டு செல்லவும் முடியும். மேலும், வீடு கட்டும் முன் செலுத்திய வட்டியையும் 5 ஆண்டுகளுக்கு பிரித்து வரி விலக்கு பெறலாம். இந்த வசதிகள் புதிய வரி விதிப்பு முறையில் இல்லை. எனவே, வரி தாக்கல் செய்யும்போது இரண்டு முறைகளையும் ஒப்பிட்டு, உங்களுக்கு எது லாபகரமாக இருக்கும் என்பதை முடிவு செய்வது அவசியம்.
