தங்கம் விலை வீழ்ச்சியடையும் போது உங்கள் Gold Loan-ன் LTV அளவு RBI நிர்ணயித்த வரம்பை தாண்டக்கூடும். இதனால் வங்கிகள் Margin Call விடுக்க வாய்ப்புள்ளது. எனவே, லோனை புதுப்பிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தங்கம் விலை சரிவு உங்கள் நிதி திட்டமிடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தங்க நகைகளை பிணையமாக வைத்து கடன் பெறும்போது, தங்கத்தின் சந்தை மதிப்பு குறையும் பட்சத்தில், உங்கள் கடன் தொகையானது RBI நிர்ணயித்த பாதுகாப்பான வரம்பை விட அதிகரித்துவிடும். இதுவே நிதி நெருக்கடிக்கு முதன்மையான காரணமாகிறது.
RBI நிர்ணயித்துள்ள LTV வரம்புகள்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கத்தின் மதிப்பில் எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதற்கு RBI சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளது:
- ₹2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு: 85% LTV.
- ₹5 லட்சம் வரையிலான கடன்களுக்கு: 80% LTV.
- ₹5 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு: 75% LTV.
சந்தை விலை குறையும் போது, இந்த விகிதம் தானாகவே உயர்ந்துவிடும், இதுவே சிக்கலுக்கு வழிவகுக்கிறது.
Margin Call என்றால் என்ன?
நீங்கள் கடனை புதுப்பிக்கும் (Renewal) போது, லெண்டர்கள் தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பை மறுமதிப்பீடு செய்வார்கள். அப்போது லோன் தொகை அதிகப்படியாக இருந்தால், வங்கி உங்களுக்கு 'Margin Call' அனுப்பும். அதாவது, நீங்கள் உடனடியாக கடனின் அசலை (Principal) குறைக்க வேண்டும் அல்லது கூடுதல் நகைகளை பிணையாக வழங்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், வட்டி சரியாக கட்டினாலும், உங்கள் நகைகளை ஏலம் விடுவதற்கு வங்கிக்கு உரிமை உண்டு.
கடன் மேலாண்மைக்கான டிப்ஸ்
பலரும் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். இது வட்டிச் சுமையை கூட்டும். தங்கம் விலை சரிந்து வரும் சூழலில், புதிய கடன் பெறுவதை விட, இருக்கும் அசலை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதே புத்திசாலித்தனம். லோனை ரினியூ செய்வதற்கு முன், வங்கியிடம் வட்டி விகிதம் மற்றும் செயலாக்கக் கட்டணம் (Processing Fee) குறித்து தெளிவான விளக்கத்தைப் பெறுங்கள்.
