தீபாவளி பண்டிகை காலத்தில் கையில் கூடுதல் பணம் புழங்கும் இந்த நேரத்தில், தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, கடன்களை அடைக்கவும், அவசரக்கால நிதியை வலுப்படுத்தவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தீபாவளி போனஸ் மூலம் கிடைக்கும் கூடுதல் பணத்தை பண்டிகை கால செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும் கருவியாக மாற்றினால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். நிபுணர்கள் பரிந்துரைக்கும் சில முக்கிய வழிமுறைகள் இங்கே:
கூலிங்-ஆஃப் (Cooling-off) உத்தி
பணத்தை கையில் வைத்திருக்கும் போது செலவு செய்யத் தூண்டுவது இயல்பு. இதற்கு ஒரு தீர்வு, இந்த போனஸ் தொகையை ஒரு 30 நாட்கள் லிக்விட் ஃபண்ட் (Liquid Fund) அல்லது ஸ்வீப்-இன் பிக்சட் டெபாசிட்டில் (Fixed Deposit) போட்டு வைப்பது. இது தேவையற்ற உணர்ச்சிவசப்பட்ட செலவுகளைத் தடுத்து, அந்தப் பொருள் உண்மையில் தேவையா என்பதைச் சிந்திக்க உங்களுக்கு கால அவகாசம் கொடுக்கும்.
கடன் மற்றும் பாதுகாப்பு முதல் முன்னுரிமை
புதிய முதலீடுகளைச் செய்வதற்கு முன், உங்கள் பேலன்ஸ் ஷீட்டை சுத்தப்படுத்துங்கள். குறிப்பாக கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் போன்ற அதிக வட்டி கொண்ட கடன்களை முதலில் அடைத்துவிடுங்கள். இதன் வட்டி விகிதம், நீங்கள் சந்தையில் பெறும் வருமானத்தை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், தற்போதைய பொருளாதார சூழலில் 9 முதல் 12 மாதங்கள் குடும்ப செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு அவசரக்கால நிதியை (Emergency Fund) வைத்திருப்பது அவசியம். நிறுவனங்கள் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸை மட்டும் நம்பியிருக்காமல், உங்களுக்கென பிரத்யேகமான ஹெல்த் மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிகளை இந்த போனஸ் பணத்தில் எடுப்பது புத்திசாலித்தனம்.
முதலீடு மற்றும் வளர்ச்சி
எல்லா பணத்தையும் ஒரே நேரத்தில் பங்குச் சந்தையில் கொட்டாதீர்கள். SIP முறையில் ஏற்கனவே முதலீடு செய்து வருபவர்கள், இந்த போனஸை 'சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான்' (STP) மூலம் அடுத்த 12 மாதங்களுக்கு பிரித்து பங்குச்சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது ரிஸ்க்கைக் குறைக்கும்.
முக்கியமாக, போனஸ் தொகையில் 10% முதல் 20% வரை மட்டுமே பண்டிகை கொண்டாட்டங்களுக்குச் செலவிடுங்கள். மேலும், ஒரு 5% தொகையை உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள (Upskilling) ஒதுக்குங்கள். இது எதிர்கால வேலைவாய்ப்பு பாதுகாப்பிற்கு மிகச் சிறந்த முதலீடாக அமையும்.
