Public Provident Fund (PPF) முதலீடுகளுக்குச் சட்டப்பூர்வமான பாதுகாப்பு உண்டு. வரி பாக்கிகளை வசூலிக்க வருமான வரித் துறை PPF கணக்கை நேரடியாக முடக்க முடியாது என்றாலும், அந்தப் பணம் வங்கிக் கணக்கிற்கு வந்தவுடன் நிலைமை மாறிவிடும்.
இந்திய முதலீட்டாளர்களின் ஓய்வுக்கால திட்டமிடலில் Public Provident Fund (PPF) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வரிச் சலுகை மற்றும் பாதுகாப்பான வட்டி காரணமாக பலரும் இதில் முதலீடு செய்கின்றனர். ஆனால், வரித் துறையுடன் சட்டச் சிக்கல் ஏற்படும்போது, இந்த முதலீடு பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு.
PPF-க்கு உள்ள சட்டப் பாதுகாப்பு
தற்போதைய இந்தியச் சட்டங்களின்படி, வரி பாக்கிகளை வசூலிக்க வருமான வரித் துறை (Income Tax Department) ஒருவருடைய PPF கணக்கை முடக்கவோ அல்லது ஜப்தி செய்யவோ முடியாது. குஜராத் உயர் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள், PPF என்பது ஓய்வுக்கால சேமிப்பு என்பதால் அதற்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளன.
வரி பாக்கி குறையுமா?
PPF கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்பதற்காக, உங்கள் வரி பொறுப்புகள் குறைந்துவிடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வரித் துறை உங்கள் PPF தொகையை எடுக்க முடியாது என்றாலும், உங்கள் பிற சொத்துக்களான சேமிப்புக் கணக்கு (Savings Account), மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் அல்லது இதர சொத்துக்களை முடக்கி வரி பாக்கியை வசூலிக்க அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
கவனிக்க வேண்டிய 'Withdrawal' ட்ராப்
PPF கணக்கில் இருக்கும் வரை மட்டுமே அந்தத் தொகைக்கு பாதுகாப்பு. நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்போ அல்லது காலத்திற்கு பிறகோ அந்தப் பணத்தை எடுத்து உங்கள் சாதாரண வங்கிக் கணக்கில் மாற்றியவுடன், அந்தப் பாதுகாப்புக் கவசம் நீங்கிவிடும். அந்தத் தொகை பொதுவான பணமாக மாறிவிடும் என்பதால், வரித் துறை அதை எளிதாக முடக்க வாய்ப்புள்ளது.
நிபுணர்கள் தரும் அறிவுரை
வரிப் பிரச்சனைகள் இருந்தால் அதைச் சட்டப்பூர்வமான மேல்முறையீடு (Appeal) மூலமே தீர்க்க வேண்டும். PPF பணத்தை வைத்து வரி கட்டாமல் தப்பிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். வரி நோட்டீஸ்களை அலட்சியப்படுத்தினால், மற்ற பணப்புழக்கங்கள் முடக்கப்பட்டு நீங்கள் பெரிய நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். ஓய்வுக்கால சேமிப்பைத் தனித்தன்மையுடன் பராமரித்து, வரி விவகாரங்களை முறையாகக் கையாள்வதே புத்திசாலித்தனம்.
