Resale வீடுகளை வாங்கும் போது, வங்கியின் சொத்து மதிப்பீடு (Valuation) நீங்கள் பேசி முடித்த விலையை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த 'Valuation Gap' மற்றும் இதர மறைமுகச் சிக்கல்கள் உங்கள் பட்ஜெட்டை எப்படி பாதிக்கும் என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் ஒரு பழைய வீட்டை அல்லது Resale Flat-ஐ வாங்கத் திட்டமிட்டால், விற்பனையாளருடன் பேசும் விலை மட்டுமே இறுதி என்று நினைத்துவிடாதீர்கள். வங்கி செய்யும் சொத்து மதிப்பீடு (Technical Valuation) உங்கள் பட்ஜெட்டையே மாற்றி அமைக்கலாம். வங்கி எப்போதும் விற்பனை ஒப்பந்தத்தில் உள்ள விலை அல்லது அவர்களின் மதிப்பீடு - இதில் எது குறைவோ, அதன் அடிப்படையிலேயே லோன் தொகையைத் தீர்மானிக்கும்.
Valuation Gap என்றால் என்ன?
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு வீட்டை ₹70 லட்சம் கொடுத்து வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் வங்கியின் சர்வேயர் அந்த வீட்டின் மதிப்பை ₹60 லட்சம் என மதிப்பிட்டால், உங்கள் லோன் இந்த ₹60 லட்சத்தை மையமாக வைத்தே கணக்கிடப்படும். 80% LTV (Loan-to-Value) என்றால், அந்த ₹60 லட்சத்தில் தான் லோன் கிடைக்கும். இதனால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க உங்கள் கையில் கையில் கூடுதல் சேமிப்பு இருப்பது அவசியம்.
கட்டிடத்தின் வயதும் லோனும்
வங்கித் துறையில் பழைய கட்டிடங்களுக்கு அதிக ரிஸ்க் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 25 முதல் 30 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்களுக்கு லோன் காலம் (Tenure) குறைவாகவே இருக்கும். இது உங்கள் EMI தொகையை கணிசமாக உயர்த்தும். மேலும், சமீபகாலமாகப் பழைய கட்டிடங்களுக்கு Structural Audit அறிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் குறைபாடுகள் இருந்தால், லோன் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
கவனிக்க வேண்டிய சட்டப்பூர்வ அம்சங்கள்
டோக்கன் பணம் கொடுக்கும் முன்பே, வீட்டின் விற்பனை பத்திரம் (Sale Deed), முந்தைய பதிவு ஆவணங்கள், ஆக்குபான்சி சர்டிபிகேட் (Occupancy Certificate) ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். சிறிய தவறு கூட லோனை மறுக்கச் செய்யும். Encumbrance Certificate மூலம் சொத்து மீது கடன் அல்லது வழக்கு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கூடுதல் நிதிச்சுமைகள்
வீட்டின் விலையைத் தாண்டி, ₹50 லட்சத்திற்கு அதிகமான சொத்து பரிவர்த்தனைகளுக்கு 1% TDS பிடிப்பது அவசியம். இது தவிர, முத்திரை வரி (Stamp Duty), பதிவு கட்டணம் மற்றும் வங்கியின் ப்ராசஸிங் பீஸ் மீதான GST போன்ற கூடுதல் செலவுகளையும் கவனத்தில் கொண்டு திட்டமிடுங்கள். லோன் அப்ளை செய்வதற்கு முன்பே வங்கியிடம் சொத்தின் மதிப்பீட்டைப் பற்றி ஒரு தெளிவான கருத்தைப் பெறுவது சிறந்தது.
