2026-ன் புதிய ஆய்வின்படி, பணவீக்கத்தை சமாளிக்க பாதிக்கும் மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள் Fixed Deposits-ல் இருந்து விலகி, P2P Lending போன்ற மாற்று முதலீட்டு முறைகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
இந்தியர்களின் முதலீட்டு பழக்கத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு நடத்தப்பட்ட 10,000 முதலீட்டாளர்கள் பங்கேற்ற ஆய்வின் முடிவுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 52% சேமிப்பாளர்கள் தங்களது முதலீட்டை பாரம்பரிய Fixed Deposits (FD) முறையிலிருந்து, அதிக லாபம் தரக்கூடிய மாற்று முதலீட்டு கருவிகளுக்கு மாற்றியுள்ளனர். பணவீக்கத்தை விட அதிக லாபம் ஈட்டவும், வட்டி வருமானத்தின் மீதான வரிச் சுமையைக் குறைக்கவும் இந்த மாற்றம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதிக லாபத்தை தேடும் முதலீட்டாளர்கள்
பல ஆண்டுகளாக இந்திய குடும்பங்களின் பாதுகாப்பான தேர்வாக FD இருந்த நிலையில், நிதி அறிவு (Financial Literacy) அதிகரித்ததால் இப்போது மக்கள் அதிக ரிட்டர்ன்ஸ் கிடைக்கக்கூடிய P2P (Peer-to-Peer) லேண்டிங் தளங்களை நாடுகின்றனர். இது வங்கிகளை விட அதிக வட்டி வழங்கினாலும், இதில் முதலீட்டிற்கு 'கியாரண்டி' கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.
ரிஸ்க் vs பாதுகாப்பு
வங்கிகளில் உள்ள FD-க்கு ₹5 லட்சம் வரை DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு உண்டு. ஆனால் P2P லேண்டிங்கில் கடன் வாங்குபவர்கள் திரும்ப செலுத்தவில்லை என்றால் (Credit Risk) அசலுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 35% பேர் மட்டுமே FD உடன் கூடுதலாக இவற்றை ஒரு கூடுதல் முதலீடாக கருதுகின்றனர். 13% பேர் இன்னும் ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாமல் பாரம்பரிய FD-யையே தேர்ந்தெடுக்கின்றனர்.
இரண்டாம் கட்ட நகரங்களில் வேகம்
இந்த மாற்றம் பெருநகரங்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. Tier 2 மற்றும் Tier 3 நகரங்களில் உள்ள 62% முதலீட்டாளர்கள் டிஜிட்டல் வசதியால் இந்த புதிய முதலீட்டு முறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இத்தகைய தளங்களை NBFC-P2P என வகைப்படுத்தி முறைப்படுத்தியுள்ளது என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தற்போது 35 முதல் 50 வயதுக்குட்பட்ட பணிபுரியும் நபர்களே இந்த மாற்றத்திற்கு தலைமை தாங்குகின்றனர். அதிக லாபத்தை நோக்கும்போது, அந்த முதலீட்டு தளங்களின் நம்பகத்தன்மையையும், கடன் பெறுபவர்களின் தரத்தையும் ஆய்வு செய்வது மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
