கிரெடிட் கார்டுகளை சரியாக நிர்வகிப்பது அதிக வட்டி கடன்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். இந்த 5 எளிய விதிகளை பின்பற்றினால், கிரெடிட் ஸ்கோரை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
கிரெடிட் கார்டுகள் ஒரு வசதியான கருவிதான், ஆனால் அதை சரியாக கையாளாவிட்டால் பெரிய நிதி நெருக்கடியை உருவாக்கிவிடும். உங்கள் எதிர்கால கடன் தேவைகளுக்கு கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியம்.
முழு தொகையை செலுத்துங்கள் (Pay in Full)
ஒவ்வொரு மாதமும் பில் தொகையை முழுமையாக செலுத்துவது மிக முக்கியம். 'மினிமம் அமௌண்ட்' மட்டும் கட்டுவது உங்களை பெரிய சிக்கலில் தள்ளும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின்படி, முழுமையாக செலுத்தாத போது, வங்கி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வட்டி வசூலிக்கத் தொடங்கும். இது உங்களை நீண்ட கால கடன் சுழற்சியில் சிக்க வைத்துவிடும்.
கிரெடிட் பயன்பாடு (Credit Utilization Ratio)
உங்கள் கிரெடிட் லிமிட்டில் 30%-க்கும் குறைவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். CIBIL போன்ற அமைப்புகள் இதைத்தான் கவனிக்கும். லிமிட் முழுவதையும் பயன்படுத்தினால், நீங்கள் கடன் சுமையில் இருப்பதாக வங்கி கருதும், இது உங்கள் ஸ்கோரை குறைக்கும்.
கிரெடிட் லிமிட்டை வருமானமாக நினைக்காதீர்கள்
கிரெடிட் கார்டு லிமிட் என்பது வங்கி உங்களுக்கு வழங்கும் கடன் வரம்பு மட்டுமே, அது உங்கள் பணம் அல்ல. இதை உங்கள் வருமானமாக கருதி செலவு செய்வது பெரிய தவறு. ஒவ்வொரு முறை கார்டை பயன்படுத்தும் போதும், அது உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் குறையும் உணர்வுடன் செலவு செய்ய வேண்டும்.
ரிவார்டு பொறியில் சிக்காதீர்கள்
கேஷ்பேக் அல்லது பாயிண்ட்ஸ் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற செலவுகளை செய்யாதீர்கள். ரிவார்டுகளை விட, நீங்கள் கட்டும் வட்டி பல மடங்கு அதிகமாக இருக்கும். ரிவார்டுகள் ஒரு கூடுதல் பலன் மட்டுமே, செலவு செய்ய இது தூண்டுதலாக இருக்கக்கூடாது.
கண்காணிப்பும் ஒழுக்கமும்
பணம் செலுத்துவதை ஆட்டோமேஷன் செய்தாலும், உங்கள் ஸ்டேட்மென்ட்டை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி புதிய கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். குறைவான எண்ணிக்கையில் கார்டுகளை வைத்துக்கொண்டு, சரியான நேரத்தில் பணம் கட்டுவதே சிறந்த வழி.
