பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை விட்டுவிட்டு, உலகளாவிய பணக்கார குடும்பங்கள் இப்போது ஸ்போர்ட்ஸ் டீம்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு துறையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். ஐந்து குடும்ப அலுவலகங்களில் (Family Offices) ஒன்று தற்போது விளையாட்டில் முதலீடு செய்துள்ளது.
பணக்கார குடும்பங்களின் முதலீட்டு உத்தியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இளைய தலைமுறை மேலாளர்கள் பாரம்பரியமான ஸ்டாக் மார்க்கெட் மற்றும் பாண்டுகளைத் தாண்டி, ஸ்போர்ட்ஸ் டீம்களை ஒரு லாபகரமான முதலீட்டுத் துறையாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். Bank of America Private Bank-ன் சமீபத்திய அறிக்கைப்படி, மில்லினியல் மற்றும் Gen Z தலைவர்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களில் 40% பேர் விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
முதலீடாக மாறிய விளையாட்டு
முன்பெல்லாம் ஸ்போர்ட்ஸ் டீம் வாங்குவது என்பது வெறும் ஆடம்பரமான பொழுதுபோக்காக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது இது ஒரு சீரியஸான 'Alternative Asset' ஆக உருவெடுத்துள்ளது. சுமார் 60% குடும்ப அலுவலகங்கள் இந்தத் துறையில் முதலீடு செய்துள்ளன அல்லது முதலீடு செய்யத் தயாராகி வருகின்றன. வெறும் டீம் வாங்குவது மட்டுமல்லாமல், ஸ்போர்ட்ஸ் எக்யூப்மெண்ட் தயாரிப்பு, ஸ்டேடியம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மெர்ச்சண்டைஸ் விநியோகம் என 18% நிறுவனங்கள் இந்தத் துறையின் பிற வணிகங்களிலும் முதலீடு செய்கின்றன.
ஏன் இந்த மாற்றம்?
இந்தியாவைப் பொறுத்தவரை, IPL, ISL மற்றும் PKL போன்ற லீக் தொடர்கள் வெறும் விளையாட்டுப் போட்டிகளாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அவை ஒரு தொழில்முறை வணிகமாக மாறியுள்ளன. பங்குச்சந்தையில் நல்ல நிறுவனங்கள் ஐபிஓ (IPO) வருவது குறைந்திருப்பதால், மாற்று முதலீடாக (Alternative Assets) இந்தத் துறை பார்க்கப்படுகிறது. பொதுவாகவே, பணக்கார குடும்பங்கள் தங்கள் சொத்தில் 26% முதல் 50% வரையிலான தொகையை ரியல் எஸ்டேட் மற்றும் பிரைவேட் ஈக்விட்டியில் வைக்கும் நிலையில், அதில் ஸ்போர்ட்ஸும் இப்போது இணைந்துள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டிய அபாயங்கள்
நிச்சயமாக இதில் ரிஸ்க்கும் உள்ளது. பங்குச்சந்தையில் ஷேர்களை எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும், ஆனால் ஒரு ஸ்போர்ட்ஸ் டீமின் பங்குகளை விற்பது அவ்வளவு எளிதல்ல (Illiquid Asset). மேலும், இந்த டீம்களின் விலை தற்போது உச்சத்தில் இருப்பதால், இவை அளவுக்கு அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனவா என்ற அச்சமும் எழுந்துள்ளது. வருங்கால ரிட்டர்ன்கள் என்பது மீடியா உரிமங்கள் மற்றும் ரசிகர்களின் ஆர்வத்தைப் பொறுத்தே அமையும் என்பதால், முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
