2006-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிதாரி கொலை வழக்கில் தொடர்புடைய சுரேந்திர கோலி, ஹரித்துவாரில் உயிரிழந்தார். உச்ச நீதிமன்றத்தால் அனைத்து வழக்குகளிலிருந்தும் கடந்த 2025 நவம்பரில் விடுவிக்கப்பட்ட நிலையில், இப்போது அவரது உயிர் பிரிந்துள்ளது.
2006-ம் ஆண்டு நொய்டாவின் செக்டார் 31 பகுதியில் நடந்த நிதாரி கொலை வழக்கில் பெயர் அடிபட்ட சுரேந்திர கோலி, ஹரித்துவாரில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சம்பவ இடத்தில் தற்கொலை கடிதம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. இதன்மூலம் சுமார் 19 ஆண்டுகால நீண்ட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
பின்னணி என்ன?
டிசம்பர் 2006-ல் தனது முதலாளி மோனிந்தர் சிங் பந்தேருடன் சேர்ந்து இவர் கைது செய்யப்பட்டார். அப்பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டுக்குள் இவருக்கு பலமுறை மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 2014-ல் உச்ச நீதிமன்றம் இந்த தண்டனைக்குத் தடை விதித்தது.
சட்டப்போராட்டமும் விடுதலையும்
வழக்கின் ஆதாரங்கள் பலவீனமாக இருந்ததை உணர்ந்த நீதிமன்றங்கள், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூலம் கடந்த 2023 அக்டோபரில் 12 வழக்குகளிலிருந்து இவரை விடுவித்தன. ஆதாரங்கள் முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை மற்றும் வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டவை என்ற காரணங்கள் இதற்குக் கூறப்பட்டன.
இறுதியாக, முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த 2025 நவம்பர் 11-ம் தேதி, எஞ்சியிருந்த இறுதி வழக்கிலிருந்தும் அவரை விடுவித்தது. சிறையில் 19 ஆண்டுகள் கழித்த கோலி, நவம்பர் 12, 2025 அன்று கஸ்னா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு ஹரித்துவாரில் வசித்து வந்தார்.
