பஞ்சாப் மாநிலம் கண்ணாவில், சிவசேனை பிரமுகர் வீட்டில் போதைப்பொருளை மறைத்து வைத்து பொய் வழக்கு போட்ட ASI சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பெரும் பரபரப்பு.
பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில், காவல்துறை அதிகாரியின் அத்துமீறல் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உதவி காவல் ஆய்வாளர் (ASI) சுக் தேவ் சிங் என்பவரே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்டிய உண்மை
சிவசேனை தலைவர் மஹந்த் காஷ்மீர் கிரி என்பவரின் வீட்டில், போலீசார் சோதனை நடத்துவதற்கு சற்று முன்னதாக, சிவில் உடையில் இருந்த ASI சுக் தேவ் சிங், படுக்கைக்கு அடியில் ஒரு பொருளை மறைத்து வைப்பது சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதன் பிறகு வந்த போலீஸ் படை, அதே இடத்தில் 30 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகக் கூறி வழக்குப்பதிவு செய்தது.
என்ன நடக்கிறது?
வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அரசியல் பிரமுகர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கண்ணா மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) டாக்டர் தர்பன் அலுவாலியா அதிரடியாக உத்தரவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
தற்போது இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரி உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் செயல்பட்டாரா அல்லது தனிப்பட்ட முறையில் இந்த சதித்திட்டத்தை தீட்டினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பஞ்சாப் காவல்துறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.
