வருமான வரித்துறை, ITR-1 படிவத்தை எளிமையாக்கியுள்ளது. இதன் மூலம், இனி பல சில்லறை முதலீட்டாளர்கள் கேப்பிட்டல் கெயின்ஸ் மற்றும் பல சொத்துக்களின் வருமானத்தை இதில் காட்டலாம். ஆனால், ITR-2 படிவத்தை தாக்கல் செய்பவர்களுக்கு வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் பற்றிய விவரங்களை விரிவாக அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ITR-1: சில்லறை முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம்!
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் வருமான வரி படிவம் ITR-1 (சஹஜ்). இது 5.25 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துபவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த படிவத்தில் சில முக்கிய மாற்றங்களை வருமான வரித்துறை (CBDT) செய்துள்ளது.
- கேப்பிட்டல் கெயின்ஸ்: இனி, பட்டியலிடப்பட்ட பங்குகளில் இருந்து ₹1.25 லட்சம் வரை நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் பெற்றவர்களும் ITR-1 படிவத்தை பயன்படுத்தலாம். முன்பு, சிறிய லாபம் ஈட்டியிருந்தாலும் ITR-2 படிவத்திற்கு மாற வேண்டியிருந்தது.
- சொத்து வருமானம்: இரண்டு வீடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை இதில் காட்டும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், சில்லறை முதலீட்டாளர்கள் எளிதாக வரி தாக்கல் செய்ய உதவும்.
தானியங்கி முறையில் தகவல்கள்
வரி தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்க, வருமான வரி போர்டல் தகவல்களை முன்கூட்டியே நிரப்பும் (Pre-filling) வசதியை மேம்படுத்தியுள்ளது. சம்பளம், வங்கி வட்டி, டிவிடெண்ட், மற்றும் பங்குச்சந்தை லாபம் குறித்த தகவல்கள் Form 26AS, AIS, TIS போன்ற அறிக்கைகளில் இருந்து தானாகவே நிரப்பப்படும். இதனால், கைமுறையாக டைப் செய்யும் வேலை குறையும்.
மேலும், 2024 மதிப்பீட்டு ஆண்டிலிருந்து, சமர்ப்பிக்கப்பட்ட ரிட்டர்னில் தவறு இருந்தால், அதை சரிபார்க்கும் முன் 'Discard Return' என்ற ஆப்ஷன் மூலம் நீக்கிவிட்டு புதிதாக தாக்கல் செய்யலாம். இது, திருத்தப்பட்ட ரிட்டர்ன் தாக்கல் செய்வதை விட வேகமானது.
ITR-2: கூடுதல் விவரங்கள் அவசியம்!
ITR-1 எளிமையாக்கப்பட்டாலும், ITR-2 படிவத்தில் சிக்கலான வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- வெளிநாட்டு சொத்துக்கள்: Schedule FA-வின் கீழ், வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள், வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்ற மானியங்கள் போன்ற விவரங்களை மிக விரிவாக அளிக்க வேண்டும். இதை சரியாக செய்யாவிட்டால், 'Black Money Act' கீழ் அபராதம் விதிக்கப்படலாம்.
- டிஜிட்டல் சொத்துக்கள்: Virtual Digital Assets (VDA) குறித்த Schedule VDA-வில், ஒவ்வொரு பரிவர்த்தனையின் விவரத்தையும் தனித்தனியாக குறிப்பிட வேண்டும். கிரிப்டோ லாபங்களுக்கு 30% வரி விதிக்கப்படும், மேலும் இழப்புகளை மற்ற வருமானங்களுடன் ஈடுசெய்யவோ அல்லது அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லவோ முடியாது.
- சொத்து மற்றும் கடன்: ₹50 லட்சம்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு Mandatory-யான Schedule AL-ல், சொத்து மற்றும் கடன் விவரங்கள் மேலும் விரிவாக கேட்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஓய்வூதியக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் இனி ITR-1-க்கு பதிலாக ITR-2-ஐப் பயன்படுத்த வேண்டும். வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வெளிநாட்டு வருமானம் குறித்த சரியான கணக்கை பெறவும் இந்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் தங்களது பதிவுகள் AIS தகவல்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது.
