VHP தலைவர் விகாஸ் பிரபாகர் கொலை வழக்கில் தொடர்புடைய Babbar Khalsa International அமைப்பின் முக்கிய நபரான ஹர்விந்தர் குமாரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை (NIA) சமீபத்தில் நடத்திய அதிரடி நடவடிக்கையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பதுங்கியிருந்த ஹர்விந்தர் குமார் (எ) சோனு பர்னாலா கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை NIA அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர். இது பஞ்சாபின் நங்கல் பகுதியில் நடைபெற்ற VHP தலைவர் விகாஸ் பிரபாகரின் படுகொலை வழக்கில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
கொலையின் பின்னணி
கடந்த 2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தத் துயரமான சம்பவம், எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்பான Babbar Khalsa International (BKI)-ன் சதி வலையைக் அம்பலப்படுத்தியது. விசாரணையின்படி, ஹர்விந்தர் குமார் இந்தத் தடைசெய்யப்பட்ட அமைப்பின் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டுள்ளார். குறிப்பாக, தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்ப்பது, நிதி உதவி அளிப்பது மற்றும் ஆயுதக் கடத்தலை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை அவர் கவனித்து வந்துள்ளார்.
விசாரணை வேகம்
கடந்த 2024 மே மாதம் தொடங்கப்பட்ட இந்த வழக்கில், இதுவரை பல குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, 2026 ஆகஸ்ட் மாதம் இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான மன்வீர் ராம் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர் ஆயுத விநியோகத்தை கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது NIA அதிகாரிகள், வெளிநாட்டில் உள்ள மூளையாகச் செயல்படும் நபர்களுக்கும், இந்தியாவில் உள்ள உள்ளூர் அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளை துண்டிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வழக்கு தற்போது சிறப்பு NIA நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
