கேரள போலீஸ் ஒரு அதிர்ச்சி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஹாஸ்பிடல் அப்பாயிண்ட்மெண்ட் ஆப் என்ற பெயரில் வரும் போலி செயலிகளை டவுன்லோட் செய்தால், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள UPI பணம் திருடப்படும் அபாயம் உள்ளது.
மருத்துவமனை அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்யும் தளங்கள் என்ற பெயரில், பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் புதிய வகை மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். கூகுள் தேடல் முடிவுகளைக் கூட போலியாக மாற்றி அமைத்து, அப்பாவி மக்களை ஏமாற்றும் இந்த கும்பல், மருத்துவமனை ஊழியர்கள் போல பேசி வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் ஒரு குறிப்பிட்ட பைலை டவுன்லோட் செய்ய வைக்கிறார்கள்.
மோசடி எப்படி நடக்கிறது?
அந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்தவுடன், உங்கள் போனின் முழு கட்டுப்பாடும் அந்த கும்பலிடம் சென்றுவிடும். குறிப்பாக, SMS மூலம் வரும் OTP-களை இந்த மால்வேர் (Malware) திருடி விடுகிறது. இதனால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் சுலபமாக திருடப்படுகிறது. குறிப்பாக UPI Lite போன்ற குறைந்த மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளை குறிவைப்பதன் மூலம், வங்கி அறிவிப்புகள் (Alerts) வராமலே பணத்தை இவர்கள் அபேஸ் செய்கிறார்கள்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
எந்த ஒரு மருத்துவமனையும் தங்களது ஆப்-ஐ வாட்ஸ்அப் லிங்க் மூலமாக அனுப்பாது. எனவே, எப்போதும் Google Play Store போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே ஆப்-களை டவுன்லோட் செய்யுங்கள். தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.
ஒருவேளை தெரியாமல் நீங்கள் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்துவிட்டால், உடனடியாக செய்ய வேண்டியவை:
- போனின் இணைய இணைப்பை (Internet) துண்டியுங்கள்.
- வங்கியை தொடர்பு கொண்டு கணக்கை உடனே Freeze செய்யுங்கள்.
- சைபர் கிரைம் உதவி எண்ணான 1930-ஐ அழைத்து புகார் தெரிவியுங்கள்.
