ஜம்மு காஷ்மீரில் அரசு ஆலோசனை கூட்டத்தின் போது, பெண் அதிகாரி ஒருவரை ஐஏஎஸ் அதிகாரி குமார் ராஜீவ் ரஞ்சன் தரக்குறைவாக திட்டும் வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலையிடத்தில் நடந்த அநாகரிகம்
'மிஷன் யுவா' (Mission YUVA) என்ற அரசுத் திட்டத்தை ஆய்வு செய்யும் விர்ச்சுவல் கூட்டத்தின் போது, இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் நிர்வாக செயலாளரான குமார் ராஜீவ் ரஞ்சன், காந்தர்பால் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் உதவி இயக்குனர் பீனிஷ் வானியை (Beenish Wani) பொதுவெளியில் கடுமையாக திட்டியுள்ளார்.
மிரட்டலும், பதவி நீக்க உத்தரவும்
கூட்டத்தில் பீனிஷ் வானி ஒரு கருத்தைச் சொல்ல முயன்றபோது, ரஞ்சன் அவரைப் பேச விடாமல் தடுத்ததுடன், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிரட்டியுள்ளார். அங்கிருந்தவர்களிடம் அந்தப் பெண் அதிகாரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யவும், பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைச் சிலர் போலியானது என்று வாதிட முயன்றாலும், கூட்டத்தில் இருந்தவர்கள் இது உண்மைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
அரசியல் தலைவர்களின் கோபம்
இந்த அராஜக செயலுக்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாக சேவை சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிடிபி (PDP) தலைவர் இல்தியா முஃப்தி (Iltija Mufti), சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
