திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் (TTD) நிதி கட்டமைப்பை நவீனப்படுத்த ICAI களமிறங்கியுள்ளது. கணக்கு வழக்குகளை டிஜிட்டல் மயமாக்குவதுடன், கோயில் நிலங்களை REITs மூலம் நிர்வகிக்கும் ஆலோசனைகளும் நடைபெறுகின்றன.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் (TTD) நிதி நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைக்க, இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) முன்வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் பணக்கார ஆன்மீக அமைப்புகளில் ஒன்றான TTD, தன்னிடம் உள்ள கோடிக்கணக்கான நிலங்கள் மற்றும் தங்க இருப்புக்களை நிர்வகிக்கும் பழைய முறைகளை மாற்றி, நவீன நிதி நடைமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
கணக்கு முறைகளில் அதிரடி மாற்றம்
கடந்த 30 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த TTD-ன் கணக்கு கையேடுகள் முழுமையாக மாற்றப்பட உள்ளன. தினசரி காணிக்கை வசூல், வரவு-செலவு கணக்குகளை தற்போதைய நவீன நிதி தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றவும், இதற்காக ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து கணக்குகளையும் தானியங்கி முறையில் கண்காணிக்க ERP (Enterprise Resource Planning) மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நிலங்களை நிர்வகிக்க REITs திட்டம்
TTD வசமுள்ள பரந்து விரிந்த நிலங்களை முறையாக நிர்வகிக்க, ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளை (REITs) பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளை ICAI ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் நிலங்களின் உரிமையை விட்டுக்கொடுக்காமல், அதில் இருந்து வருவாய் ஈட்டவும், நிலங்களை தொழில்முறை ரீதியாக கையாளவும் வழிவகை செய்யப்படும்.
இதனுடன், கோயிலின் தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க சொத்துக்களை துல்லியமாக மதிப்பிடவும், அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், இந்தியாவின் பிற முக்கிய ஆன்மீக அறக்கட்டளைகளுக்கும் இது ஒரு புதிய நிர்வாக வரைபடமாக (Blueprint) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
