இந்தியாவில் அமைப்புசாரா மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக, மத்திய அரசு ஒரு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (Contributory Pension Scheme) வடிவமைத்து வருகிறது. இது EPFO 3.0 சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு இனி ஓய்வூதிய பாதுகாப்பு!
இந்தியாவில் அமைப்புசாரா (unorganised) மற்றும் முறைசாரா (formal) துறைகளில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு ஒரு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (Contributory Pension Scheme) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கொண்டுவரும் அடுத்த கட்ட சீர்திருத்தமான EPFO 3.0-ன் முக்கிய அங்கமாக இருக்கும்.
எப்படி செயல்படும்?
இந்த புதிய திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்வார்கள். இந்த பணம் நீண்ட கால அரசுப் பத்திரங்களில் (Government-backed securities) முதலீடு செய்யப்படும். இதன் மூலம், உறுப்பினர்களுக்கு 60 வயதை எட்டும்போது, அவர்களின் சேமிப்புத் தொகை மாத ஓய்வூதியமாக மாற்றப்படும். இது தற்போதைய வட்டி விகிதங்கள் மற்றும் வருடாந்திர (annuity) விகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும். மேலும், உறுப்பினர்கள் தங்களின் சேமிப்பை குறிப்பிட்ட கால முறை திரும்பப் பெறும் திட்டங்கள் (systematic withdrawal plans) அல்லது வருடாந்திர விருப்பங்கள் மூலமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 55 வயதில் இருந்தே, தங்கள் ஓய்வூதிய சேமிப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தாங்களே தீர்மானிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்படும்.
NPS-ல் இருந்து என்ன வித்தியாசம்?
அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்த புதிய திட்டம் தற்போதுள்ள தேசிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து (NPS) வேறுபட்டது என்று தெரிவித்துள்ளனர். NPS பெரும்பாலும் வருடாந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இந்த புதிய மாதிரி, தற்போதைய வருங்கால வைப்பு நிதி (Provident Fund) கட்டமைப்பைப் போலவே, ஆபத்து இல்லாத, உண்மையான வருவாயை (risk-free structure with real returns) வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், முதலாளிகள் மற்றும் குறைந்த சம்பளம் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இணைப் பங்களிப்பு (government co-contributions) ஆகியவற்றின் மூலம் ஒரு நிலையான நிதி ஆதாரம் உருவாக்கப்படும்.
யாருக்கெல்லாம் பயன்?
இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை இந்த திட்டம் நிரப்பும். தற்போதுள்ள 55 கோடி தொழிலாளர்களில் சுமார் 76% பேருக்கு போதுமான ஓய்வூதிய பாதுகாப்பு இல்லை. இந்த புதிய திட்டத்தின் மூலம், பதிவுசெய்யப்பட்ட 3.5 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களுக்கு வெளியே உள்ள உயர் வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஓய்வூதிய சேமிப்பிற்கான ஒரு பாதை வழங்கப்படும். EPF மற்றும் GPF கணக்குகளில் உள்ள தற்போதைய இருப்புகளை மாற்றுவதன் மூலம் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செயலாக்க நிறுவனத்தை இறுதி செய்யும் நிலையில், இதன் தொடக்க தேதி, குறிப்பிட்ட வட்டி விகித அமைப்பு மற்றும் தகுதி வரம்புகள் குறித்த அறிவிப்புகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
