வேலை மாறுபவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! இனி ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) கணக்கை மாற்றுவதற்கு தனிப்பட்ட விண்ணப்பங்கள் தேவையில்லை. EPFO (Employees' Provident Fund Organisation) புதிய ஆட்டோமேட்டிக் பணப் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆதார் மூலம் இணைக்கப்பட்ட UAN எண்களைப் பயன்படுத்தி, ஓய்வூதிய சேமிப்புகள் தானாகவே புதிய கணக்கில் சேர்க்கப்படும்.
இனி வேலை மாறினால் PF மாற்றுவது ஈஸி!
வேலை செய்வோர் ஒவ்வொரு முறையும் வேலை மாறும்போது, தங்களது ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) கணக்கை புதிய கம்பெனிக்கு மாற்றுவது ஒரு பெரிய வேலையாக இருந்தது. இதற்கு பழைய மற்றும் புதிய நிறுவனங்களிடம் அனுமதி பெற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இப்போது இந்த முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. புதிய 'ஆட்டோமேட்டிக் PF பரிமாற்ற' முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
எப்படி இது வேலை செய்யும்?
இந்த புதிய முறைக்கு, உங்களது யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) ஆனது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். KYC விவரங்களும் சரியாக சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், நீங்கள் வேலை மாறும்போது, உங்களது PF கணக்கில் உள்ள தொகை தானாகவே புதிய நிறுவனத்தின் கணக்குடன் இணைக்கப்படும். இதற்கு EPFOவின் சென்ட்ரலைஸ்டு ஐடி எனேபிள்டு சர்வீசஸ் (CITES) பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்படுகிறது. இது நிர்வாக தாமதங்களைத் தவிர்த்து, லட்சக்கணக்கான ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பை சீராக வைத்திருக்க உதவும்.
என்னென்ன மாற்றங்கள்?
முன்பு, ஊழியர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் கொடுத்த பிறகு, பழைய நிறுவனத்தின் டிஜிட்டல் ஒப்புதல் தேவைப்பட்டது. இதனால் பல நாட்கள் தாமதம் ஏற்பட்டது. ஆனால், இந்த புதிய சிஸ்டத்தில், EPFOவின் Backend-ல் இது தானாகவே நடக்கும். ஊழியர்கள் தங்களின் UAN எண்ணின் கீழ் உள்ள பல்வேறு வேலைவாய்ப்பு பதிவுகளை ஒருங்கிணைக்க முடியும். இதனால், நீண்ட கால ஓய்வூதிய திட்டமிடல் எளிதாகிறது. மேலும், காலாவதியான PF கணக்குகள் சேர்வதையும் இது தவிர்க்கும்.
என்ன கவனிக்க வேண்டும்?
இந்த தானியங்கி முறை சிறப்பாக செயல்பட, உங்களது UAN எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, KYC விவரங்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது EPFO யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலில் உள்நுழைந்து, உங்களது 'Service History' பிரிவில் அனைத்து வேலைவாய்ப்பு பதிவுகளும் சரியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், போர்ட்டலில் உள்ள புகார் தீர்க்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி சரிசெய்யவும். இதன் மூலம், உங்களது ஓய்வூதிய சேமிப்புப் பதிவுகள் எப்போதும் துல்லியமாக இருக்கும்.
