திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதத்திற்கு சப்ளை செய்யப்பட்ட நெய்யில் கலப்படம் செய்ததாக Sukriti Foods நிறுவனத்தின் ப்ரொமோட்டர் கைலாஷ் சந்த் மங்லாவை ED அதிரடியாக கைது செய்துள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) கோயிலுக்கு வழங்கப்பட்ட நெய்யில், கலப்படம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை (ED) அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. Sukriti Foods நிறுவனத்தின் ப்ரொமோட்டர் கைலாஷ் சந்த் மங்லாவை கைது செய்துள்ள அதிகாரிகள், அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முறைகேடு எப்படி நடந்தது?
விசாகப்பட்டினத்தில் உள்ள சிறப்பு PMLA நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல்களின்படி, 2019 முதல் 2024 வரை இந்த மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. சுத்தமான பசு நெய் என்று கூறி, அதற்குப் பதிலாக பாமாயில், பாமோலின் மற்றும் MG-90 போன்ற தொழிற்சாலை ரசாயனங்களைச் சேர்த்து விற்பனை செய்துள்ளனர். தரக்கட்டுப்பாட்டு சோதனைகளைத் தந்திரமாக ஏமாற்றி, போலியான 'Agmark Special Grade' சான்றிதழ்களுடன் இந்த நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பணமதிப்பு மற்றும் வலைப்பின்னல்
இந்த ஒட்டுமொத்த சப்ளை முறைகேட்டின் மதிப்பு ₹230 கோடி ஆகும். இதில், கைலாஷ் சந்த் மங்லாவின் பங்களிப்பு மட்டும் ₹96 கோடி வரை இருக்கும் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. முறைகேட்டை மறைக்க Sri Vyshnavi Dairy Specialities மற்றும் Malganga Milk & Agro Products போன்ற பல போலி நிறுவனங்களை இடைத்தரகர்களாகப் பயன்படுத்தி, கணக்கு வழக்குகளைத் தவறாகக் காட்டியுள்ளது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அடுத்தகட்ட விசாரணை
இந்த வழக்கில் கைது செய்யப்படும் இரண்டாவது முக்கிய நபர் கைலாஷ் சந்த் மங்லா ஆவார். முன்னதாக, Bhole Baba Organic Dairy Milk நிறுவனத்தின் ப்ரொமோட்டர் விபின் ஜெயின் இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வளவு பலமான தரக்கட்டுப்பாட்டு விதிகள் இருந்தும், இந்த போலியான பொருட்கள் எப்படி கோயில் வரை சென்றது என்பது குறித்து ED அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
