பெங்களூருவில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயது பழ வியாபாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்த சம்பவம் என்ன?
பெங்களூரு ராமமூர்த்தி நகர் பகுதியில், நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயது பெண் ஒருவர் தனது வீட்டருகே கேப் டாக்ஸி ஒன்றிற்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக வந்த 42 வயது பழ வியாபாரி விஜய் ராகவ், அந்தப் பெண்ணிடம் சென்று 'உங்கள் விலை என்ன?' என்று கேட்டு பணம் தருவதாக கூறியதாக தெரிகிறது. அப்பெண் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்து, தான் பேசிக்கொண்டிருக்கும்போதே தனது மொபைல் ஃபோனில் இந்த உரையாடலை வீடியோவாக பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போலீஸ் நடவடிக்கை
வீடியோ வைரலானதை அடுத்து, பெங்களூரு போலீஸார் உடனடியாக விஜய ராகவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, தான் அருகில் போன் பேசிக்கொண்டிருந்ததாகவும், பெண்ணை துன்புறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், பெண் ஒருவரிடம் தவறான முறையில் பேரம் பேசுவது சட்டப்படி குற்றம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், வீடியோ எடுத்ததன் மூலமும், சமூக வலைதளங்களில் இந்த விஷயம் பரப்பப்பட்டதன் மூலமும் தனக்கு நீதி கிடைத்ததாக கூறியுள்ளார்.
பாதுகாப்பு குறித்த கவலைகள்
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் தனியாக வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்புவோரின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வேலை நேரங்கள் தாறுமாறாக இருப்பதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் தனித்தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவசர காலங்களில் போலீசாரின் உடனடி நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் விவாதம் சூடுபிடித்துள்ளது.
