இந்தியாவின் இலக்கும் நிதியுதவி தேவையும்
இந்தியா, 2030-க்குள் 500 GW புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி திறனையும், 2070-க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்தையும் அடைய இலக்கு வைத்துள்ளது. ஆனால், இந்த இலக்குகளை எட்டுவதற்கு ஆண்டுதோறும் சுமார் $160 பில்லியன் நிதியுதவி தேவைப்படுகிறது. இந்த பெரிய நிதி இடைவெளியை நிரப்புவதற்காகவே, BII மற்றும் CIP இணைந்து 'North Star' என்ற இந்த $300 மில்லியன் பிளாட்ஃபார்மை உருவாக்கியுள்ளன.
'North Star'-ன் பங்கு என்ன?
இந்தியாவின் ரெனியூவல் எனர்ஜி சந்தையில் உள்ள நிதி மற்றும் திட்ட செயலாக்க இடைவெளிகளை குறைப்பதே 'North Star'-ன் முக்கிய நோக்கம். சூரிய சக்தி (Solar), காற்றாலை (Wind), ஹைப்ரிட் திட்டங்கள் (Hybrid projects) மற்றும் பேட்டரி சேமிப்பு (Battery storage) போன்றவற்றில் முதலீடுகள் செய்யப்படும். BII மற்றும் CIP தலா $150 மில்லியன் வரை இந்த பிளாட்ஃபார்மில் முதலீடு செய்ய உள்ளன.
எதிர்பார்க்கப்படும் நன்மைகள்
இந்த கூட்டு முயற்சியால் ஆண்டுக்கு 4 மில்லியன் MWh-க்கும் அதிகமான தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஆண்டுக்கு சுமார் 4 மில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும். BII-யின் ரோஹிட் ஆனந்த் கூறுகையில், 'இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி வாய்ப்புகளையும், இந்தத் துறையை விரைவுபடுத்துவதில் முதலீட்டின் பங்கையும் இந்த துவக்கம் காட்டுகிறது' என்றார். CIP-யின் பீட்டர் ஜானிக் ஷியோன்டோஃப்ட், 'இந்தியா ஒரு முக்கிய உலக சந்தையாகும், இந்த கூட்டாண்மை மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு அதிகரிக்கும்' என்று தெரிவித்தார். 'North Star' என்பது BII-யின் பரந்த £1.1 பில்லியன் காலநிலை நிதி முயற்சியின் கீழ் வரும் முதல் முதலீடாகும்.