Quant Mutual Fund தனது முதலீட்டு உத்தியை மாற்றியுள்ளது. AI துறையில் அதிக ரிஸ்க் இருப்பதாக கருதி, அங்கிருந்து வெளியேறி, இந்திய வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற உள்நாட்டு வளர்ச்சியை மையமாகக் கொண்ட துறைகளில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
முதலீட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடி முடிவின் பின்னணியில், குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகம் பல முக்கியமான காரணங்களை முன்வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக Amazon, Microsoft மற்றும் Meta போன்ற சர்வதேச நிறுவனங்கள் AI உள்கட்டமைப்பிற்காக $1 டிரில்லியன் க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளன. இந்த அதிகப்படியான முதலீடு, நீண்ட கால அடிப்படையில் பங்குகளை அதிக விலைக்கு (Overvaluation) கொண்டு சென்றுள்ளதாக குவாண்ட் கருதுகிறது. எனவே, தற்போது கூட்ட நெரிசல் மிகுந்த AI சந்தையை விட்டு விலகி, இந்தியாவில் கவனிக்கப்படாத, அதே சமயம் வலுவான அடிப்படை கொண்ட துறைகளை நோக்கி நிதியைத் திருப்பியுள்ளனர்.
உள்நாட்டு சந்தையில் கவனம்
தற்போது இந்தியாவிலேயே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிறுவனம் நம்புகிறது. குறிப்பாக வங்கித்துறை (Banking), ரியல் எஸ்டேட், நுகர்வோர் மற்றும் தொழில்முறை உற்பத்தி துறைகளில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இத்துறைகள் இன்னும் போதிய முதலீடுகளைப் பெறாததால், எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைக் கொடுக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இதுமட்டுமின்றி, டெலிகாம், பார்மா மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைகளிலும் நிறுவனம் தொடர்ந்து கவனத்தைச் செலுத்தி வருகிறது.
கார்ப்பரேட் லாபமும் ரிஸ்க்கும்
நிஃப்டி (Nifty) நிறுவனங்களின் லாபம் 14% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் நிறுவனங்கள் முறையே 27% மற்றும் 38% வளர்ச்சி கண்டுள்ளன. இது இந்திய நிறுவனங்களின் பலத்தைக் காட்டுகிறது.
ஆயினும், கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் போன்ற இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்வு, இந்திய நிறுவனங்களின் லாப வரம்பை (Profit Margin) பாதிக்கலாம் என நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலையில், ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கும் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட், இந்திய சந்தையின் இந்த 'Bottom-up' அணுகுமுறை மூலம் சிறப்பான வருமானத்தை ஈட்ட இலக்கு வைத்துள்ளது.
